புதுடில்லி: உலக தொழிலாளர்கள் அமைப்பு இன்று (ஏப்., 8) வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் காரணமாக போடப்பட்டுள்ள, ஊரடங்கு உத்தரவால் உலகம் முழுக்க 270 கோடி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 40 கோடி இந்திய முறைசாரா தொழிலாளர்கள், வறுமையின் பிடியில் சிக்கும் அபாயம் உள்ளது என எச்சரித்துள்ளது.
மேலும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா வைரஸால், ஏற்கனவே லட்சக்கணக்கான முறைசாரா தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு மற்றும் பிற கட்டுப்பாடுகள் காரணமாக, இந்தியா, நைஜீரியா, பிரேசில் ஆகிய நாட்டின் தொழிலாளர்கள் கணிசமாக பாதிப்படைந்துள்ளனர்.
குறிப்பாக, குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில், முறைசாரா தொழிலாளர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். இவர்களுக்கான சுகாதார சேவைகள் மற்றும் சமூக பாதுகாப்பு அம்சங்களும் குறைவாகவே உள்ளது. பொருத்தமான கொள்கை இல்லை என்றால், தொழிலாளர்கள் வறுமையில் வீழ்வதற்கான அதிக ஆபத்தை எதிர்கொள்வார்கள். தங்கள் வாழ்வாதாரத்தை மீண்டும் பெறுவதிலும் அதிக சவால்களை அனுபவிப்பார்கள்.
இந்தியாவில், முறைசாரா பொருளாதாரத்தில் பணிபுரியும் 90 சதவீத மக்கள், அதாவது 40 கோடி பேர், இந்நெருக்கடியான நிலையால் வறுமையை சந்திக்கும் அபாயத்தில் உள்ளனர். தற்போதைய ஊரடங்கால் பலர் கிராமப்புறங்களுக்கு திரும்பி உள்ளனர்.
முழு ஊரடங்கு மற்றும் பகுதி ஊரடங்கால் 270 கோடி தொழிலாளர்கள் உலகம் முழுக்க பாதிக்கப்பட்டுள்ளனர். இது உலக தொழிலாளர்கள் எண்ணிக்கையில் 81 சதவீதம் ஆகும். மேலும், தொழிலாளர்களுக்கு ஊதியக் குறைப்பு, பணிநேரம் குறைப்பு, தகுதிக்கும் குறைந்த பணி போன்ற சிக்கல்கள் ஏற்படும். முக்கிய துறைகளான சில்லறை வர்த்தகம், தங்குமிடம் மற்றும் உணவு சேவைகள் துறை, உற்பத்தி துறை ஆகியவை வேலைவாய்ப்பில்லாதவைகளாக மாறியுள்ளன. துரித கதியிலான நடவடிக்கைகள் தான் மக்களை காப்பாற்றும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Leave a Reply