தமிழகத்தில் உள்ள வெளிமாநில தொழிலாளர்களின் விவரங்களை கணக்கெடுத்து அனுப்பும்படி மாவட்ட கலெக்டர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
கொரோனா தொற்றை தடுக்கும் நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில், வெளிமாநிலத்தில் இருந்து பிழைப்புக்காக தமிழகத்துக்கு வந்த தொழிலாளர்களின் நிலை பரிதாபமாகிவிட்டது. அவர்களுக்கான அடிப்படை தேவைகளை வேலைக்கு அமர்த்தியவர்களே செய்து தர வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது.
எல்லா மாநிலங்களிலும் இதுபோன்ற பிரச்சினை இருப்பதை கருத்தில் கொண்டு, வெளிமாநிலங்களில் இருந்து பிழைப்புக்காக வந்த தொழிலாளர்களுக்கு மாநில அரசு உதவி செய்யும்படி மத்திய அரசு கேட்டுக்கொண்டது.
அதைத் தொடர்ந்து அவர்களுக்கு தனி முகாம்களை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அமைத்துக் கொடுத்துள்ளனர். அவர்களுக்கு 15 கிலோ அரிசி உள்ளிட்ட உதவிகளை அரசே அளித்து வருகிறது.
இந்தநிலையில் அதுபோன்ற தொழிலாளர்களின் விவரங்களை சேகரித்து அனுப்புவதற்கு மாவட்ட கலெக்டர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் தொழிலாளர்கள் மற்றும் வேலைவாய்ப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நசிமுத்தீன் அனுப்பிய கடிதத்தில் அனைத்து விவரங்களையும் 14-ந் தேதிக்குள் அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
Leave a Reply