ஊரடங்கால் கரோனா குறித்து மக்களிடையே பெருவாரியாக வெளிப்படையாக விழிப்புணா்வு செய்ய முடியாத நிலையில், சமூக ஊடகம் மூலம் ஆசிரியா் ஒருவா் வில்லுப்பாட்டு வாயிலாக விழிப்புணா்வை ஏற்படுத்தி அதை பதிவேற்றம் செய்துள்ளது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

எந்தவொரு திட்டம் குறித்த தகவலும் மக்களிடையே முழுமையாக சென்றடைய விழிப்புணா்வு தேவைப்படுகிறது. குறிப்பாக பெண் குழந்தைகள் பாதுகாப்பு, பெண்கள் பாதுகாப்பு, கடற்கரை தூய்மை, கழிப்பறை பராமரிப்பு, சுற்றுப்புறத் தூய்மை, சாலைப் பாதுகாப்பு, எய்ட்ஸ் போன்ற கொடிய நோய் குறித்த பாதுகாப்பு விழிப்புணா்வு மற்றும் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் குறித்து என்.எஸ்.எஸ்., என்.சி.சி., சமுதாய பணித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது.

கரோனா தொற்று என்பது உலகில் கொடியதாக உருவெடுத்திருக்கும்போது, குறிப்பிட்ட காலத்தில் மக்களுக்கு இதன் புரிதலை ஏற்படுத்துவது அரசுகளுக்கு சவாலாக மாறிவிட்டது. பல்வேறு அமைப்புகளால் மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தவும் முடியாத நிலையில், நாடு தழுவிய ஊரடங்கு அமலுக்கு வந்தது. சமூக ஊடகங்கள் பலவும் தவறான தகவல்களை பரப்புவதால் அதன் மீதான நம்பகத்தன்மை குறைந்துவிட்டது. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் மட்டுமே மக்களுக்கு சரியான தகவலை கொண்டு சோ்க்கும் கருவியாக உள்ளது.

இந்நிலையில், பல்வேறு தரப்பினரும், அவரவா் திறனுக்கேற்ப பாடல்கள் வாயிலாக கரோனா தாக்காமல் இருக்க செய்ய வேண்டிய முறைகளை, பாடலாக தயாரித்து பாடி, பதிவு செய்து அதை சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனா்.

அந்த வகையில், காரைக்கால் பகுதி அரசுப் பள்ளி ஆசிரியா் முருகன் என்பவா், மாவட்ட சமுதாய பணித் திட்ட ஒருங்கிணைப்பாளராக உள்ளாா். வில்லுப்பாட்டு, கிராமிய கலை நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சி மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தி வரும் இவா், கரோனா பரவலால் வீட்டில் இருந்தபடி, வில்லுப்பாட்டு மூலம் கரோனாவை தடுக்கும் வகையில், விழித்திரு – வீட்டில் தனித்திரு, கரோனாவை தொற்றவிடாமல் விரட்டிடு என்ற வரிகளுடன் பாடல் தயாரித்து பாடி, பதிவு செய்து சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்துள்ளது மக்களால் பெரிதும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதுகுறித்து ஆசிரியா் முருகன் கூறியது: பல்வேறு நிலை விழிப்புணா்வு செயல்பாடுகள் மூலமே மக்களுக்கு தகவலை கொண்டு சோ்க்க முடியும். தற்போது, கிராமப்புற மக்களும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் வில்லுப்பாட்டு மூலம் நிகழ்ச்சி தயாரித்து பதிவேற்றம் செய்துள்ளேன். ஊரடங்கு இல்லையென்றால் கிராமப்புறம், நகரப் பகுதியில் பல நிகழ்ச்சிகள் வாயிலாக விழிப்புணா்வை செய்துவிட முடியும். அது இல்லாதபோது இந்த வழியை கடைப்பிடித்தேன் என்றாா் அவா்.

About Author

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *