ரூ.8 கோடி மதிப்புள்ள கொரோனா தொற்று கண்டறியும் கருவிகளை அளித்த டாடா நிறுவனத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது. தமிழ்நாடு அரசுக்கு தோள் கொடுக்கும் விதமாக பொதுமக்களும், நிறுவனங்களும், அமைப்புகளும் கொரோனா நோய் நிவாரண நடவடிக்கைகளுக்காக முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தங்களின் பங்களிப்பை மனமுவந்து அளித்து வருகின்றன.
மேலும், கொரோனா வைரஸ் பாதித்தவர்களை கண்டு பிடிக்கவும், சிகிச்சை அளிக்கவும் தேவையான கருவிகளையும் பல நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக தற்போது டாடா நிறுவனம், கொரோனா தொற்றை கண்டுபிடிப்பதற்காக, சுமார் ரூ.8 கோடி மதிப்புள்ள 40 ஆயிரத்து 32 பி.சி.ஆர். கிட் கருவிகளை தமிழக அரசுக்கு அளித்துள்ளது.
இந்த சூழ்நிலையில் டாடா நிறுவனம் செய்த உதவிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களின் சார்பாக தனது மனமார்ந்த நன்றியையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Leave a Reply