ராமாயணத்தில் அனுமன் போலவும், பைபிளில் இயேசு போலவும் இந்தியா உதவ வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் பிரேசில் அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

பிரேசிலியா,

சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது, அமெரிக்காவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக உலகம் முழுவதும், 14 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 86 ஆயிரத்து 744 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 3 லட்சத்து 16 ஆயிரத்து 855 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனா வைரஸ் நோய்க்கு தற்போது அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சைகள் அல்லது தடுப்பு தடுப்பூசிகள் எதுவும் இல்லை. மலேரியா மருந்து ஹைட்ராக்ஸி குளோரோகுயின், நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சாத்தியமான சிகிச்சையாக பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் மருந்துகளில் ஒன்றாக உள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகமாகப் பாதிக்கப்பட்டால் உள்நாட்டுத் தேவைக்காக அதிக அளவில் தேவைப்படலாம் என்ற நோக்கில், மத்திய அரசு இந்த மருந்தை ஏற்றுமதி செய்ய தடை விதித்திருந்தது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கடந்த சில தினங்களுக்கு முன்பு, பிரதமர் மோடியைத் தொலைபேசியில் அழைத்ததோடு, ஹைட்ராக்சிக்குளோரோயின் மருந்து ஏற்றுமதிக்கான தடையை விலக்குமாறு கேட்டுக் கொண்டார்.

அதனை தொடர்ந்து, மனிதாபிமான அடிப்படையில் பிற நாடுகளுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயினை ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. மேலும் இந்த மருந்தானது அமெரிக்கா, இலங்கை உட்பட 30 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. அந்த பட்டியலில் இடம்பெறாத பிரேசில், ஹைட்ராக்சிக்குளோரோகுயின் மருந்தை தங்களுக்கும் ஏற்றுமதி செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக, பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் மருந்துக்கான வேண்டுகோளை முன்வைக்கும்போது, புராண காவியமான ராமயணத்தில் குறிப்பிட்டிருக்கும் சில முக்கிய நிகழ்வுகளை அதிபர் போல்சனரோ குறிப்பிட்டுள்ளார்.

ராமாயணத்தில், ராமனின் தம்பி லட்சுமனனின் உயிரைக் காப்பாற்றுவதற்காக அனுமன் சஞ்சீவி மூலிகையை இமயமலையில் இருந்து கொண்டு வருவதைப்போல, கிறிஸ்துவர்களின் புனித நூலான பைபிளில், கண் தெரியாதவர்களுக்கு பார்வையை மீட்டெடுக்கும் இயேசுவைப் போல பிரேசிலுக்கு இந்தியா உதவ வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், உலகளாவிய மருத்துவ இக்கட்டான சூழலில், பிரேசிலும் இந்தியாவும் ஒன்றிணைந்து செயல்பட்டு மக்களைக் காக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, கடிதம் எழுதுவதற்கு முன்னதாக பிரதமர் மோடியும், பிரேசில் அதிபர் போல்சனரோவும் தொலைபேசியில் கடந்த சனிக்கிழமை தொடர்புகொண்டு, உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பின் நிலை குறித்து பேசியதாகவும், பிரேசிலும் இந்தியாவும் இணைந்து கொரோனா வைரஸை எவ்வாறு எதிர்கொள்வது என விவாதித்ததாகவும் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

About Author

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *