ரஷியாவில் வாலிபர் ஒருவர், சத்தமாக பேசியதால் 5 பேரை சுட்டுக்கொன்றார்.
மாஸ்கோ,
ரஷியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் அந்த நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகள் முழுமையாக முடக்கப்பட்டுள்ளன. அந்த பகுதிகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, மக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் தலைநகர் மாஸ்கோவில் இருந்து 200 கி.மீ. தொலைவில் உள்ள ரியாசான் பிராந்தியம் முடக்கப்பட்டு இருக்கிறது. மக்கள் அனைவரும் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.
இந்த நிலையில் ரியாசான் பிராந்தியத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டின் மாடியில் 5 பேர் கும்பலாக நின்று பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் சத்தமாக பேசியதாக தெரிகிறது.
இதனால் அந்த வீட்டில் இருந்த வாலிபர் ஒருவர் அமைதியாக பேசும்படி அவர்களை எச்சரித்துள்ளார். இதில் அந்த கும்பலுக்கும், வாலிபருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த வாலிபர், வீட்டினுள் சென்று விலங்குகளை வேட்டையாடுவதற்கு பயன்படுத்தும் துப்பாக்கியை எடுத்து வந்து அந்த கும்பலை சரமாரியாக சுட்டார்.
இதில் ஒரு பெண் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து, துடிதுடித்து உயிரிழந்தனர். இதையடுத்து, போலீசார் அந்த வாலிபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Leave a Reply