கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க ஹைட்ரோகுளோரோகுயின் மருந்தை அமெரிக்காவுக்கு விற்பனை செய்யுமாறு பிரதமர் மோடியை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கேட்டுக் கொண்டார்.

வாஷிங்டன்,

உயிர்க்கொல்லி தொற்று நோயான கொரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதற்கான முயற்சியில் அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் விஞ்ஞானிகள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.

கொரோனாவுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்றபோதிலும், மலேரியா காய்ச்சலை குணப்படுத்த உதவும் ஹைட்ரோகுளோரோகுயின் மருந்து கொரோனா நோயாளிகளை குணப்படுத்த உதவுவதாக கண்டறியப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து கொரோனா அறிகுறி உள்ளவர்களுக்கும், பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களுக்கும் சிகிச்சை அளிக்க இந்த மருந்தை பயன்படுத்துமாறு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சிபாரிசு செய்து உள்ளது. எனவே தற்போது அந்த மருந்துதான் முக்கியமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ஹைட்ரோகுளோரோகுயின் மருந்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு கடந்த 4-ந் தேதி தடை விதித்தது.

இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நேற்று முன்தினம் பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது கொரோனாவை கட்டுப்படுத்த அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து தங்கள் முழுபலத்தையும் பயன்படுத்த இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.

இதைத்தொடர்ந்து, வெள்ளை மாளிகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், மோடியை தான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும், இந்தியாவில் ஹைட்ரோகுளோரோகுயின் மருந்து அதிக அளவில் தயாரிக்கப்படுவதால், அதை அமெரிக்காவுக்கு வழங்குமாறு கேட்டுக்கொண்டதாகவும், அதுகுறித்து இந்தியா தீவிரமாக பரிசீலித்து வருவதாகவும் தெரிவித்தார்.

ஹைட்ரோகுளோரோகுயின் மருந்து தயாரிக்கும் இந்திய நிறுவனங்களுக்கு, அந்த மருந்தை அதிக அளவில் ஏற்றுமதி செய்யுமாறு அமெரிக்கா ஆர்டர் கொடுத்து இருப்பதாகவும், அதை ஏற்று, ஏற்றுமதி செய்தால் இந்தியாவின் செயலை நான் பாராட்டுவேன் என்றும் அப்போது அவர் கூறினார்.

ஹைட்ரோகுளோரோகுயின் மருந்துடன் வேறுசில மருந்துகளின் கலவையும் சேர்த்து நியூயார்க் நகரில் கொரோனா வைரஸ் தாக்கிய நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், அதற்கு நல்ல பலன் கிடைத்து இருப்பதாகவும், இந்த மருந்து கலவை வெற்றி அடைந்தால் அது மிகப்பெரிய கொடையாக இருக்கும் என்றும் டிரம்ப் தெரிவித்து உள்ளார்.

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தையும், பலியானவர்களின் எண்ணிக்கை 8,400-ஐயும் தாண்டிவிட்டது. அந்த நாட்டில் கொரோனா காட்டுத்தீ போல் வேகமாக பரவி வருவதால் அடுத்த சில வாரங்களில் சாவு எண்ணிக்கை 1 லட்சம் முதல் 2 லட்சம் வரை அதிகரிக்கக்கூடும் என்று அமெரிக்க சுகாதார துறை நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர்.

இதனால் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் டிரம்ப் நிர்வாகம் மும்முரமாக ஈடுபட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *