ரெயில் சேவை ரத்து காரணமாக, மே 3-ந் தேதி வரை பயணம் செய்ய முன்பதிவு செய்யப்பட்ட 39 லட்சம் ரெயில் டிக்கெட்டுகளை ரெயில்வே துறை ரத்து செய்தது.

புதுடெல்லி,

நாடு தழுவிய ஊரடங்கு, மே 3-ந் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதனால், ரெயில்கள் ரத்து, 3-ந் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 9 ஆயிரம் பயணிகள் ரெயில் கள், 3 ஆயிரம் மெயில், எக்ஸ்பிரஸ் ரெயில்கள் உள்பட 15 ஆயிரத்து 523 ரெயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதனால், நேற்று (புதன்கிழமை) முதல் மே 3-ந் தேதி வரை பயணம் செய்ய முன்பதிவு செய்யப்பட்ட ரெயில் டிக்கெட்டுகளை ரெயில்வே துறை ரத்து செய்ய உள்ளது. ஏப்ரல் 14-ந் தேதிக்கு மேல் ஊரடங்கு நீட்டிக்கப்படாது என்ற நம்பிக்கையில், ஏப்ரல் 15-ந் தேதி முதல் பயணம் செய்வதற்கு முன்பதிவு செய்ய ரெயில்வே துறை அனுமதித்தது.

அப்படி மே 3-ந் தேதி வரை பயணம் செய்ய முன்பதிவு செய்யப்பட்ட மொத்த டிக்கெட்டுகள் சுமார் 39 லட்சம் உள்ளன. இவை ரத்து செய்யப்படுகின்றன.

இதில், ஆன்லைன் டிக்கெட்டுகளுக்கான முழு கட்டணமும் பயணிகளின் வங்கிக்கணக்கில் தானாக வந்து சேரும் என்று ரெயில்வே துறை அறிவித்துள்ளது. கவுண்ட்டர்களில் பெறப்பட்ட முன்பதிவு டிக்கெட்டுகளுக்கான முழு கட்டணத்தை ஜூலை 31-ந் தேதிக் குள் திரும்பப் பெறலாம்.

ஆனால், தற்போது ரெயில் நிலைய முன்பதிவு டிக்கெட் கவுண்ட்டர்கள் செயல்படாது. அது திறக்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் ரத்து செய்யப்படாத ரெயில்களில் பயணிக்க முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளை ரத்து செய்தாலும் முழு கட்டணமும் கிடைக்கும் என்று ரெயில்வே துறை தெரிவித்துள்ளது.

ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு வசதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆன்லைன் டிக்கெட்டுகளை ரத்து செய்யும் வசதி வழக்கம்போல் இயங்குகிறது.

About Author

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *