மும்பையில் கடற்படை வீரர்கள் 26 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர்களை தனிமைப்படுத்தி வைத்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

மும்பை,

கொரோனா பரவுவதை தடுக்க ஊரடங்கு விதிக்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள போதிலும், நோய்த்தொற்று பரவுவதை முற்றிலுமாக தடுக்க முடியவில்லை.

இந்திய ராணுவத்திலும் இந்த நோய்த்தொற்று பரவி விட்டது. இந்திய ராணுவ வீரர்கள் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து, போர்க்கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்கள் மற்றும் கடற்படை தளங்களில் கொரோனா பரவுவதை தடுக்க உரிய முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று கடற்படை துணைத் தளபதி கரம்பீர் சிங் கடந்த வாரம் வீடியோவில் செய்தி வெளியிட்டு இருந்தார்.

இந்தநிலையில், மும்பையில் உள்ள மேற்கு கடற்படை பிரிவைச் சேர்ந்த வீரர்கள் 26 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்கள், சரக்குகள் மற்றும் உபகரணங்களை கொண்டு செல்லும் ஐ.என்.ஐ. ஆங்க்ரே என்ற கடற்படை கப்பலில் பணியாற்றி வருபவர்கள்.

இவர்களில் 25 பேர் மும்பையில் உள்ள கடற்படை வளாகத்தில் உள்ள குடியிருப்பில் ஒரே அறையில் தங்கி இருந்தவர்கள் ஆவார்கள். ஒரு வீரர் வீட்டில் தனது தாயாருடன் தங்கி இருந்தவர்.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து 26 வீரர்களும் மும்பையில் உள்ள கடற்படைக்கு சொந்தமான ஆஸ்பத்திரியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வீட்டில் தங்கி இருந்த வீரரின் தாயாருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதால், அவருக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

26 வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து, மும்பை கடற்படை குடியிருப்பு வளாகத்தில் உள்ள வீடுகளில் குடியிருக்கும் அனைவருக்கும் கொரோனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

அந்த குடியிருப்பு வளாகம் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அங்கிருந்து யாரும் வெளியே செல்லவும், வெளியாட்கள் உள்ளே வரவும் தடை விதிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.

மேலும் அந்த 26 வீரர்களும் வேறு யார்-யாருடன் தொடர்பில் இருந்தார்கள்? அவர்கள் மூலம் வேறு யார்-யாருக்கெல்லாம் கொரோனா பரவியது என்பதை கண்டறியும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர்.

ராணுவ அமைச்சக உயர் அதிகாரிகளும், கடற்படை உயர் அதிகாரிகளும் இந்த பிரச்சினையில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்கள்.

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலான தியோடர் ரூஸ்வெல்ட் கப்பலில் இருந்த 500 வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது சமீபத்தில் கண்டு பிடிக்கப்பட்டது. இதேபோல் பிரான்ஸ் நாட்டின் கடற்படை கப்பலில் உள்ள வீரர்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இப்போது, ஒரே சமயத்தில் இந்திய கடற்படை வீரர்கள் 26 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

இந்திய ராணுவத்தில் ஒரே சமயத்தில் இவ்வளவு அதிகமான பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது ராணுவ அதிகாரிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. எனவே ராணுவம் சம்பந்தப்பட்ட அனைத்து இடங்களிலும் கொரோனா பரவுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *