பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியைத் தொடர்பு கொண்டு பேசினார்.
இதுதொடர்பாக, முதல்வர் பழனிசாமி தனது சுட்டுரைப் பக்கத்தில் குறிப்பிடுகையில், “வரும் 8-ம் தேதி நடக்கவிருக்கும் அனைத்து கட்சி கூட்டத்தில் அஇஅதிமுக சார்பில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்துள்ளார்” என்றார்.
பிரதமர் நரேந்திர மோடி வரும் ஏப்ரல் 8-ஆம் தேதி காலை 11 மணியளவில் காணொலிக் காட்சி மூலம் அனைத்துக் கட்சிகளின் நாடாளுமன்றக் குழுத் தலைவர்களுடன் கலந்துரையாட இருக்கிறார். கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில், நாடு தழுவிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாட இருப்பது இதுவே முதன்முறை.
இந்நிலையில் கரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக நிலவி வரும் சூழல் குறித்து அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்ஜி உள்ளிட்டோரைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
இந்த தலைவர்களின் வரிசையில் தமிழகத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினையும் தொடர்புகொண்டு பேசிய பிரதமர் மோடி, தற்போது தமிழக முதல்வர் பழனிசாமியையும் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
Leave a Reply