மதம் சார்ந்த கூட்டங்களை தவிர்க்க வேண்டும் என்றும், அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கான கால அளவு மதியம் 1 மணி என குறைக்கப்பட்டுள்ளதாகவும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னை,
தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கொரோனா பெருந்தொற்றினால் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இத்தருணத்தில் மக்களை பாதுகாக்க அரசின் முயற்சிகளோடு அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்பும் தேவைப்படுகிறது.
கொரோனா பெரும் தொற்று நோயினால் மனித சமுதாயத்திற்கு ஏற்படவுள்ள ஆபத்து பற்றியும் எடுத்துரைத்து இந்நோய் பரவுவதை தடுக்க அரசு எடுத்துவரும் தடுப்பு நடவடிக்கைகள் மட்டும் போதாது என்றும், மனித சமுதாயமே தங்கள் வேறுபாடுகளை புறந்தள்ளி ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும், சமூக விலகல், தனிமைப்படுத்துதல் போன்ற முயற்சிகளுக்கு அந்தந்த சமுதாய தலைவர்கள், சமூக ஆர்வலர்களை திரட்டி அரசோடு ஒன்றிணைந்து நோய்பட்டவர்கள், அவர்தம் குடும்பங்கள் மற்றும் நோயுற்றவரோடு தொடர்பு ஏற்பட்டவர்களை தனிமைப்படுத்த உதவினால்தான் இந்த நோயில் இருந்து அவர்களை மீட்டெடுக்கவும், இந்த நோய் சமூக பரவலாக மாறி மக்களிடையே பேரிழப்பை ஏற்படுத்துவதை தடுக்கவும் இயலும் என்றும், இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்ற எனது கோரிக்கை மதத் தலைவர்கள் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் பல்வேறு மதத் தலைவர்களும் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை பாராட்டி, கொரோனா தொற்றுநோய் தடுக்க எடுக்கும் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்குவதாக தெரிவித்தார்கள். அவர்கள் எடுத்துரைத்த கருத்துகளின் அடிப்படையில் அரசு சில முடிவுகளை எடுத்துள்ளது. அதன் விவரம் வருமாறு:
* நோய் தொற்று பொதுமக்களுக்கு பரவுவதை தவிர்க்க, பொதுமக்கள் எதிர்நோக்கும் பண்டிகைகள் காலத்தில், அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, மதம் சார்ந்த கூட்டங்களை தவிர்த்து சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும்.
* கொரோனா தொற்று நோய் சாதி, மத பேதமின்றி அனைவரையும் தாக்கக்கூடியது என்றும், இதற்கு மதச் சாயம் பூசுவதை அனைவரும் தவிர்க்க வேண்டும் என்றும், நோய் தொற்றால் பாதிக்கப்படுபவர்களையும், அவர்களுடைய குடும்பங்களையும் மக்கள் வெறுப்புணர்வுடன் பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.
தனியார் மருத்துவமனைகள்
* பல்வேறு மாவட்டங்களில் தனியார் மருத்துவமனைகள் திறக்கப்படுவதில்லை என்று தெரியவருவதால், மாவட்ட கலெக்டர்கள் அனைத்து மருத்துவமனைகளையும் அழைத்து பேசி, அவை திறப்பதற்கும், செயல்படுவதற்கும் தேவையான பணியாளர்களை அனுமதிக்க, உரிய வாகன வசதிகளை ஏற்பாடு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.
* கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. எனினும், சில நோய் தொற்று உள்ளவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற விரும்பினால், இதற்காக அனுமதிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற அனுமதிக்கப்படுகிறது.
* இத்தொற்று நோயினால் பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பங்களையும், இத்தொற்று நோயினால் பாதிக்கப்பட்ட நபரோடு தொடர்பில் இருந்தவர்களையும் தனிமைப்படுத்தும்போது, சமய தலைவர்கள் உதவியோடு அவர்களின் வீடுகளிலோ அல்லது இதற்கான தெரிவு செய்யப்பட்ட இடங்களிலோ அரசின் கண்காணிப்பில் தனிமைப்படுத்திக்கொள்ள, உரிய வசதிகளை செய்து கொள்ளலாம் என்றும், இதற்கென அந்தந்த பகுதியில் தன்னார்வ குழுக்கள் அரசுடன் இணைந்து பணி செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அத்தியாவசிய பொருட்கள்
* தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் போன்றவற்றை வீடுகளுக்கே சென்று வழங்க அரசு தரப்போடு இணைந்து சமூக ஆர்வலர்கள் செயல்படலாம்.
* அனைத்து மத தலைவர்களும் கோரியபடி, அவர்களின் ஆளுகையில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிற கட்டிடங்களை தனிமைப் படுத்தப்பட்டவர்களுக்காக உரிய வசதிகளை அமைத்து பயன்படுத்திக்கொள்ள உதவும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதுகுறித்த தகவலை சென்னையில் மாநகராட்சி கமிஷனரிடமும், சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்களிடமும் தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கால அளவு குறைப்பு
* காலை நேரங்களில் சந்தைப் பகுதிகளில் கூடுதல் கூட்டத்தை தவிர்க்கவும், கூடுதல் சமூக விலகலை கடைப்பிடிப்பதை உறுதி செய்யவும், தன்னார்வலர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கி பயன்படுத்திக்கொள்ள மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
அனைத்து மதத் தலைவர்களும், சமூக தொண்டர்களும், மாவட்டங்களில் மாவட்ட கலெக்டர்களுடனும், சென்னையில் மாநகராட்சி கமிஷனருடனும் ஒருங்கிணைந்து செயல்பட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இதுதவிர, மக்கள் நடமாட்டத்தை மேலும் கட்டுப்படுத்த, அத்தியாவசிய பொருட்களை வாங்க காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை அனுமதிக்கப்பட்டிருந்த கால அளவை 5-ந்தேதி(இன்று) முதல் குறைத்து, காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே அத்தியாவசிய பொருட்களை வாங்க அனுமதிக்கப்படும். இதை அனைத்து பொதுமக்களும் கடைப் பிடிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விதிமுறைகளை மீறினால் சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Leave a Reply