புதுடில்லி: நாடு முழுதும் ‘கொரோனா’ வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், மக்கள் பின்பற்ற வேண்டியவை குறித்தும், செய்யக்கூடாத விஷயங்கள் குறித்தும், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சில வழிமுறைகளை அறிக்கையாக வெளியிட்டுள்ளது.

இந்தியாவில், கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரசால், இங்கு, 5,700க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை, 160ஐ தாண்டி சென்றுகொண்டிருப்பதால், மக்கள் பீதியடைந்துள்ளனர். வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, மத்திய, மாநில அரசுகள், பல பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில், மருத்துவ பணியாளர்கள், சுகாதார ஊழியர்கள், காவல்துறையினர், இரவு, பகல் பாராமல் பணியாற்றி வருகின்றனர். எனினும், வைரஸ் மீதான அச்சத்தின் காரணமாக, இவர்களை மக்கள் புறக்கணிக்கின்றனர். இவர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டப்படுகிறது. இத்தகைய நடத்தைகள், சமூகத்தில் இடையூறுகளை ஏற்படுத்தும்.இந்த இக்கட்டான சூழலில், மக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:
* பொது சேவைகளில் ஈடுபடுவோரை பாராட்டி, அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் ஆதரவாக இருக்கவேண்டும்.
* உலக சுகாதார அமைப்பு அல்லது, மத்திய சுகாதாரத்துறை அமைச்சக இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ தகவலை மட்டுமே பிறருக்கு பகிரவேண்டும்
* சமூக ஊடகங்களில், ஒரு செய்தியை பகிர்வதற்கு முன், அந்த தகவல் உண்மையானதா என்பதை முதலில் ஆய்வு செய்ய வேண்டும்

* கொரோனா வைரசில் இருந்து மீண்டு வந்தவர்களின் கதைகள் போன்ற நேர்மறையான செய்திகளை பகிரவேண்டும்
* அதே நேரத்தில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளோர் அல்லது தனிமைப்படுத்தப்பட்டுள்ளோர் பெயர் மற்றும் அடையாளத்தை வெளியிடக்கூடாது
* மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தும் வகையிலான பதிவுகளை வெளியிடக்கூடாது
* மருத்துவ, சுகாதார ஊழியர்கள் மற்றும் காவல்துறையினரை குறிவைத்து எந்த விமர்சன பதிவுகளையும் பகிரக்கூடாது
* இந்த வைரஸ் பரவலுக்கு, குறிப்பிட்ட சமூகத்தினர்தான் காரணம் என முத்திரை குத்தக்கூடாது
* சிகிச்சைப் பெற்று வருவோரை, ‘கொரோனால் பாதிக்கப்பட்டோர்’ என அழைக்கக்கூடாது; ‘கொரோனாவில் இருந்து மீண்டு வருவோர்’ என அழைக்கவேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *