ஏழை மக்களுக்கு உணவு மற்றும் உதவிப்பொருட்களை நேரடியாக வழங்க தடை விதித்த தமிழக அரசு உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க., ம.தி.மு.க. சார்பில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

சென்னை,

கொரோனா வைரசை கட்டுப்படுத்த தேசிய அளவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த காலத்தில், தினக்கூலி தொழிலாளர்கள், ஏழைகள், நடைபாதையில் வசிப்போர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், இவர்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை அரசியல் கட்சி பிரமுகர்கள், தன்னார்வ தொண்டு அமைப்புகளை சேர்ந்தவர்கள் வழங்கி வருகின்றனர்.

இவர்களது செயல் ஊரடங்கு விதிமுறைகளுக்கு எதிராக உள்ளதாக கூறி, மக்களுக்கு நேரடியாக உணவு மற்றும் உணவு பொருட்கள் வழங்க தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் தனித்தனியாக நேற்று அவசர வழக்குகளை தாக்கல் செய்துள்ளனர். அந்த வழக்கு மனுக்களில், ‘கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு உதவும் வகையில், அவர்களுக்கு உணவு மற்றும் மளிகைப் பொருட்களையும், மருந்துப் பொருட்களையும் வழங்கி வந்தோம். இந்த உதவிகளை வழங்கும்போது முக கவசம், கையுறை அணிந்து சமூக விலகல் பின்பற்றப்பட்டது.

ஒரு புறம் வசதியான மக்களுக்கு ‘ஆன் லைன்’ மூலம் பொருட்கள் கிடைக்க அனுமதியளித்துள்ள தமிழக அரசு, ஏழை மக்களுக்கு நேரடியாக உணவுப்பொருட்கள் வழங்குவதைத் தடுக்கும் வகையில் இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. எனவே, இந்த தடை உத்தரவை ரத்து செய்யவேண்டும். இந்த ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருட்கள், மளிகை பொருட்கள், மருந்து பொருட்கள் வழங்கும் எங்கள் கட்சி தலைவர்களை தடுக்கக்கூடாது என்று தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டு உள்ளது.

இந்த மனுக்கள் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

About Author

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *