மகாத்மா காந்தி வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வரும் தொழிலாளர்களுக்கான ஒருநாள் ஊதியத்தை ரூ.229-ல் இருந்து ரூ.256-ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

இதுதொடர்பாக ஊரக மேம்பாடு மற்றும் ஊராட்சித் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 100 நாட்கள் வேலையில் உள்ள தொழிலாளர்களின் தினசரி ஊதியத்தை ஏப்ரல் 1-ந் தேதியில் இருந்து அனைத்து மாநிலங்களும் திருத்தி வழங்க வேண்டும் என்று கடந்த மார்ச் 23-ந் தேதி மத்திய அரசு உத்தரவிட்டது.

அதைத் தொடர்ந்து அவர்களின் ஒரு நாள் ஊதியத்தை ரூ.256 என்று நிர்ணயம் செய்து கடந்த மார்ச் 30-ந் தேதி அரசு உத்தரவிட்டது. இந்த நிலையில் இம்மாதம் 1-ந் தேதி ஊரக மேம்பாடு மற்றும் ஊராட்சி இயக்குனர் அரசுக்கு கடிதம் எழுதினார்.

அதில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் உள்ள தொழிலாளர்களின் தின ஊதியத்தை ஒருவருக்கு ரூ.229 என்ற வீதத்தில் இருந்து ரூ.256-ஆக திருத்தம் செய்து, மென்பொருளில் ஏற்றப்பட்டுள்ளது. 1-ந் தேதியில் இருந்து, தானியங்கி முறையில் அது செயல்பாட்டுக்கு வந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த நிதியாண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வரும் பல்வேறு வேலைகளில் ஈடுபடுவோரின் திருத்தப்பட்ட ஊதியப் பட்டியல் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் சிறப்புப் பணிக்கான ஊதியப் பட்டியல் ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் அவர் அந்தக் கடிதத்தில் கூறியிருக்கிறார்.

அதாவது, குழி தோண்டும் பணி, மரம் நடுவது போன்ற பல்வேறு பணிகளை வகைப்படுத்தியும், மாற்றுத் திறனாளிகள் மேற்கொள்ளும் சிறப்புப் பணிகளை பட்டியலிட்டும் அவற்றுக்கு ஊதிய உயர்வை அனுமதிக்க வேண்டுமென்று ஊரக மேம்பாடு மற்றும் ஊராட்சி இயக்குனர் அளித்த கோரிக்கைக்கு ஒப்புதல் அளித்து அரசு உத்தரவிடுகிறது.

அதன்படி, களத்தில் பணியாளர்களுக்கு குடிநீர் வழங்குதல், குழந்தைகளை கவனித்துக் கொள்ளுதல், பணியாளர்களுக்கு உதவுதல், குழி தோண்டப்படும் இடங்களை ஈரப்படுத்த தண்ணீர் தெளித்தல் போன்ற சிறப்புப் பணிகளை மேற்கொள்ளும் மாற்றுத் தினாளிகளுக்கு திருத்தியமைக்கப்பட்ட ஊதியம் ரூ.256 வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *