போக்குவரத்து வசதி குறைந்ததால் மளிகை பொருட்களின் விலை 25 சதவீதம் வரை உயர்ந்து இருக்கிறது. அதிலும் அரிசி, சர்க்கரை, பூண்டு ஆகியவற்றின் விலை மட்டும் அதிகளவில் உயர்ந்துள்ளது.

சென்னை,

கொரோனா பரவலை தடுக்க, ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. ஆனாலும் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் எந்த பிரச்சினையும் இருக்காது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி, அத்தியாவசிய பொருட்களை மக்கள் வாங்கி வருகின்றனர். இந்த நிலையில் அத்தியாவசிய பொருட்களில் வரும் மளிகை பொருட்களின் விலை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதற்கு முன்பு இருந்த விலையை விட தற்போது உயர்ந்துள்ளது.

அதாவது, அரிசி, பருப்பு உள்பட சில மளிகை பொருட்களின் விலை 10 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை அதிகரித்து இருப்பதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ ரூ.84-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த துவரம் பருப்பு, தற்போது ரூ.102 என்ற நிலையிலும், பாசி பருப்பு ரூ.105-க்கு விற்பனை செய்து வந்த நிலையில், தற்போது ரூ.128-க்கு விற்பனை ஆகிறது. அதேபோல், ரூ.97-க்கு விற்பனையான உளுந்தம் பருப்பு ரூ.130-க்கும், கடலை பருப்பு ரூ.54-க்கு விற்பனையான நிலையில், தற்போது ரூ.66-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பூண்டு, மிளகாய், சர்க்கரை, அரிசி ஆகியவற்றின் விலையும் எகிறி இருக்கிறது. இதில் பூண்டு விலை மட்டும் அபரிவிதமாக விலை அதிகரித்துள்ளது. ஊரடங்கு அமல்படுத்தப்படுவதற்கு முன்பு ஒரு கிலோ பூண்டு ரூ.85-க்கு விற்பனையானது. ஆனால் தற்போது ரூ.220 வரை விற்பனை ஆகிறது.

ஒரு கிலோ ரூ.35-க்கு விற்பனையான சர்க்கரை, கிலோவுக்கு ரூ.9 அதிகரித்து, ரூ.44-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மிளகாய் ரூ.145-ல் இருந்து ரூ.180 ஆகவும், அனைத்து ரக அரிசியும் 25 கிலோ மூட்டைக்கு ரூ.100 முதல் ரூ.200 வரை உயர்ந்துள்ளது.

இதுதவிர மிளகு, சீரகம், கடுகு, வெந்தயம் ஆகியவற்றின் விலையும் கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.100 வரை உயர்ந்துள்ளது. எளிதாக கிடைக்கக்கூடிய ரவைக்கு தற்போது கடும் கிராக்கி ஏற்பட்டு இருக்கிறது. சென்னையில் மொத்த விற்பனை கடைகளில் ரவை இருப்பு இல்லை. அப்படியே இருந்தாலும், அதன் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு கிலோ ரூ.28-ல் இருந்து ரூ.45 ஆக உயர்த்தி இருக்கிறார்கள்.

அதேபோல், கேரளாவில் இருந்து டீத்தூள் வருவதும் குறைந்துவிட்டது. அதனால் அதற்கு தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கிறது. மளிகை பொருட்கள் பெரும்பாலும் வட மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் இதர மாவட்டங்களில் இருந்துதான் சென்னைக்கு கொண்டுவரப்படுகிறது. தற்போது போக்குவரத்து வசதி குறைந்திருப்பதால், லாரி வாடகையை உயர்த்திவிட்டார்கள். இதனால்தான் மளிகை பொருட்களின் விலை அதிகரித்து இருக்கிறது என கோயம்பேடு மொத்த வியாபாரி பி.பாண்டியராஜன் கூறினார். நல்லெண்ணெய், பாமாயில், சன்பிளவர் ஆயில் ஆகியவற்றின் விலையும் சற்று உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் மளிகை பொருட்களுக்கு தற்போது தட்டுப்பாடு உள்ளதா? இனி வரக்கூடிய நாட்களில் அதற்கு தட்டுப்பாடு ஏற்படுமா? என்பது குறித்து மளிகை பொருட்கள் மொத்த வியாபாரி முத்துபாண்டியன் கூறியதாவது:-

கடந்த மார்ச் மாதம் 22-ந்தேதி ஒருநாள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்ட போதே, மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை ஓரளவுக்கு வாங்கி வைத்துவிட்டார்கள். அதன் தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு, 2 மாதங்களுக்கு தேவையானதை வாங்கி வைத்துக்கொண்டனர்.

அதேபோல், சில்லரை விற்பனை கடைகளிலும் ஓரளவுக்கு இருப்பு வைத்து இருக்கிறார்கள். ஆனால் மொத்த விற்பனை கடைகளில்தான் கடந்த சில நாட்களாக தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தற்போது ஓரளவுக்கு அதன் நிலைமை மாறி வந்தாலும், அவ்வப்போது தட்டுப்பாடு ஏற்படத்தான் செய்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *