புதுடில்லி: பிரதமர் மோடி, பிரதமர் அலுவலகம் மற்றும் ஜனாதிபதி ராம்நாத் ஆகியோரின் டுவிட்டர் கணக்குகளை அமெரிக்காவின் அதிகாரபூர்வ அலுவலகமான வெள்ளை மாளிகை டுவிட்டரில் பின் தொடர துவங்கியுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு உலகெங்கும் தீவிரமடைந்து வருகிறது. அமெரிக்காவில் அதன் தாக்கம் மிகத் தீவிரமாக உள்ளது. அமெரிக்காவிற்கு ஹைட்ரோக்சிகுளோரோக்வின் மருந்தை தராவிட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடுமென டிரம்ப் கூறியிருந்தார். அதனை தொடர்ந்து மனிதாபிமான முறையில் அமெரிக்காவுக்கு ஹைட்ரோக்சிகுளோரோக்வின் மருந்தை இந்தியா ஏற்றுமதி செய்ததை அடுத்து ‘மோடி கிரேட். ரியலி குட்’ என டிரம்ப் நன்றி பாராட்டியிருந்தார். ‛இந்தியா – அமெரிக்கா உறவு முன்னெப்போதையும் விட வலிமையாக உள்ளது. நெருக்கடியான காலக்கட்டங்கள், நண்பர்களை மேலும் நெருக்கமாக்குகின்றன’ என டிரம்பிற்கு மோடி பதிலளித்திருந்தார்.
இந்நிலையில் அமெரிக்க அரசின் அதிகாரபூர்வ தகவல்களை வெளியிடும் வெள்ளை மாளிகை , பிரதமர் மோடி, பிரதமர் அலுவலகம் மற்றும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆகியோரின் டுவிட்டர் கணக்குகளை பின் தொடர துவங்கியுள்ளது. வெள்ளை மாளிகை, அதிபர் டிரம்ப் உள்ளிட்ட முக்கியமான 19 கணக்குகளை மட்டுமே பின் தொடர்கிறது. அதில் அமெரிக்கர்கள் அல்லாத டிவிட்டர் கணக்குகள் என்று எடுத்து கொண்டால், பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத், பிரதமர் அலுவலகம் மட்டுமே. வேறு எந்த உலக தலைவர்களையும் வெள்ளை மாளிகை பின் தொடரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply