புதுடில்லி: மத்திய அரசின், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை, காங்., மூத்த தலைவர்கள் பாராட்டி வருவது, கட்சி மேலிடத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, மத்திய அரசு பிறப்பித்துள்ள, 21 நாள் ஊரடங்கு குறித்து, காங்., தலைவர் சோனியா மற்றும் ராகுல் ஆகியோர், விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். மக்கள் ஊரடங்கின் போது, கைகளை தட்டுமாறு, பிரதமர் மோடி விடுத்த வேண்டுகோளை, ராகுல் கடுமையாக விமர்சித்தார். மத்திய அரசை, எப்போதும் விமர்சித்து வரும் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம், கொரோனா விவகாரத்தில், மோடியின் நடவடிக்கைகளுக்கு, ஆதரவு தெரிவித்து வருகிறார். ‘ஊரடங்கை எதிர்ப்பவர்கள், அடுத்த, 21 நாட்களுக்கு அமைதி காப்பது நலம்’ என, அவர் கருத்து தெரிவித்தார்.
மேலும், ராஜஸ்தான் முதல்வர், அசோக் கெலாட், துணை முதல்வர் சச்சின் பைலட், லோக்சபா எம்.பி., சசி தரூர் உள்ளிட்ட மூத்த காங்., தலைவர்களும், பிரதமரின் நடவடிக்கைகளுக்கு, தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர். இது, காங்., மேலிடத்தை கொந்தளிக்க செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, காங்., தலைமைக்கும், அதன் மூத்த தலைவர்களுக்கும் இடையே, கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
மூத்த காங்., தலைவர்கள் மற்றும் ராகுல் இடையே, கருத்து வேறுபாடு ஏற்படுவது புதிதல்ல என்றும், இக்கட்டான சூழலில் நாடு சிக்கித் தவிக்கும் போது, மத்திய அரசை விமர்சிப்பது முறையல்ல என, காங்., மூத்த தலைவர்கள் பலரும் நினைப்பதாக, கூறப்படுகிறது. மேலும், ராகுலை மீண்டும் கட்சி தலைவராக்கும் முயற்சியில் சோனியா இறங்கியதை அடுத்து, கட்சி தலைமைக்கும், மூத்த தலைவர்களுக்கும் இடையே, உரசல் அதிகரித்துள்ளதாக, டில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Leave a Reply