பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களுடன் நடந்த சண்டையில் ராணுவ வீரர்கள் 3 பேர் வீர மரணம் அடைந்தனர்.

ஸ்ரீநகர்,

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து குப்வாரா மாவட்டம் கெரான் பகுதியில் உள்ள எல்லைக்கட்டுப்பாடு கோடு வழியாக இந்தியாவுக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றனர். இதை கவனித்த எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த ராணுவ வீரர்கள் பயங்கரவாதிகளை சரணடையும்படி கேட்டுக்கொண்டனர்.

ஆனால் அவர்கள் தொடர்ந்து இந்திய எல்லைக்குள் நுழையும் நோக்கத்தோடு, வீரர்களை நோக்கி எந்திர துப்பாக்கியால் சுட்டபடி முன்னேறி வந்தனர்.

இதையடுத்து ராணுவத்தினர் நடத்திய பதில் தாக்குதலில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சண்டையில் இந்திய வீரர்கள் 3 பேர் வீர மரணம் அடைந்தனர். அந்த பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருக்கிறதா? என்பதை கண்காணிக்கும் வகையில் கூடுதலாக ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

பயங்கரவாதிகள் வருவதை ராணுவத்தினர் உடனடியாக கவனித்ததால் ஊடுருவல் முயற்சி வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது.

காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதன் மூலம் 24 மணி நேரத்துக்குள் காஷ்மீரில் 9 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *