சி.பி.எஸ்.இ. பள்ளி கட்டணம் செலுத்துவது, ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவது எப்போது என்பது குறித்து மாநில அரசுகள் முடிவு எடுக்குமாறு சி.பி.எஸ்.இ. வேண்டுகோள் விடுத்துள்ளது.

பள்ளி கட்டணம் செலுத்துவது, ஆசிரியர்களுக்கு சம்பளம் எப்போது? – மாநில அரசுகள் முடிவு எடுக்க சி.பி.எஸ்.இ. வேண்டுகோள்

புதுடெல்லி:

கொரோனா வைரசை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், பள்ளிகள் செயல்படவில்லை. இருப்பினும், கல்வி கட்டணத்தை செலுத்துமாறு சில சி.பி.எஸ்.இ. பள்ளிகள், பெற்றோரை வற்புறுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதுபோல், ஆசிரியர்களுக்கான சம்பளத்தை வழங்காமல் இழுத்தடிப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

சி.பி.எஸ்.இ. இணைப்பு விதிகளின்படி, சி.பி.எஸ்.இ. பள்ளிகள், அந்தந்த மாநில அரசுகளின் கல்வித்துறை நிர்ணயித்த கல்வி கட்டணத்தையே வசூலிக்க வேண்டும்.

மேலும், கட்டணத்தை எந்த முறையில் வசூலிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க மாநில கல்வித்துறைக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
எனவே, சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் கல்வி கட்டணம், ஆசிரியர்கள் சம்பளம் ஆகிய பிரச்சினைகளை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கவனத்துக்கு சி.பி.எஸ்.இ. கொண்டு சென்றுள்ளது.

இதுதொடர்பாக அனைத்து மாநில, யூனியன் பிரதேச தலைமை செயலாளர்களுக்கு சி.பி.எஸ்.இ. செயலாளர் அனுராக் திரிபாதி எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பள்ளி கல்வி சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை பொறுத்தவரை, கல்வி கட்டணம், ஆசிரியர்கள் சம்பளம் ஆகியவற்றை சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் நலன்களை மனதில் கொண்டு உணர்வுப்பூர்வமாக அணுகுமாறு கேட்டுக்கொள்கிறோம். கல்வி கட்டணத்தை செலுத்துவதற்கும், ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கான சம்பளத்தை வழங்குவதற்கும் உரிய காலக்கெடுவை நிர்ணயித்து மாநில அரசுகள் உத்தரவு பிறப்பிக்கலாம். அந்த உத்தரவு குறித்து எங்களுக்கு மாநிலங்கள் தகவல் தெரிவிக்க வேண்டும். அப்போதுதான், பெற்றோரும், பள்ளி நிர்வாகமும், ஆசிரியர்களும் எங்களிடம்
விசாரிக்கும்போது, உரிய பதிலை நாங்கள் அளிக்க முடியும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

About Author

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *