நோயில் கூட தி.மு.க. அரசியல் செய்வது வேதனை அளிப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சென்னை,
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று பேட்டி அளித்த போது, அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிப்பு இருக்கிறது. ஆனால், தேவையான நிதியை கேட்டுப்பெறவில்லை என எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்து இருக்கிறாரே?
பதில்:- அவர்கள் ஆட்சிக் காலத்தில் மத்தியில் இருந்து எவ்வளவு நிதி வழங்கினார்கள் என்று சொல்ல முடியுமா?
கேள்வி:- தி.மு.க. கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அரசு திட்டமிட்டு அனுமதி வழங்கவில்லை என்று மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளாரே?
பதில்:- 144 தடை உத்தரவை நிறைவேற்ற வேண்டும் என்று, அவர்தான் சொல்லிக்கொண்டே இருந்தார். இப்போது அவரே மாற்றிப் பேசுகிறார். 144 தடை உத்தரவு சட்டத்தை அரசு சரியாகத்தான் கடைப்பிடிக்கிறது. 144 தடை சட்டத்தை அரசு கடைப்பிடிக்க வேண்டும் என்கிறார். பின்னர், அரசு சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்கிறார். சட்ட திட்டத்தின்படி அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு தடைபோட முயற்சிக்கிறார்கள். எனவே, திட்டமிட்டு விமர்சனம் செய்கிறார்கள்.
கேள்வி:- மத்திய அரசு வழங்கிய ரூ.510 கோடி நமக்கு வர வேண்டிய வழக்கமான நிதிதானே. மேற்கொண்டு சிறப்பு நிதி ஏதாவது வருமா?
பதில்:- பிரதமர் மோடியிடம் இதுகுறித்து நான் கோரிக்கை விடுத்து இருக்கிறேன். அவரும் பரிசீலனை செய்வதாக கூறி இருக்கிறார். எனவே, தேவையான நிதி நிச்சயம் தமிழகத்துக்கு கிடைக்கும்.
அ.தி.மு.க. எம்.பி.க்கள் 37 பேர் மக்களவையில் இருந்தபோது, தமிழக எம்.பி.க்கள் என்ன சாதித்தார்கள் என்று மு.க.ஸ்டாலின் அடிக்கடி கேள்வி எழுப்புவார். அதே கேள்வியை நானும் இப்போது கேட்கிறேன். தி.மு.க. எம்.பி.க்கள் 38 பேர் என்ன செய்கிறார்கள்? மக்களுக்கு பிரச்சினை ஏதாவது ஏற்படும் போது மாநில நலனுக்காக மத்திய அரசை வலியுறுத்தி தேவையான உதவிகளை பெற்றுத்தருவதுதான் எம்.பி.க்களின் கடமை.
ஆனால், இந்த விவகாரத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் மத்திய அரசை ஏதாவது வலியுறுத்தி இருக்கிறார்களா? எதையுமே அவர்கள் செய்யவில்லை. கஜா புயல், தானே புயல், வர்தா புயல், ஒகி புயல் எது வந்தாலும் சரி, ஏன் சுனாமியே வந்தாலும் குறை சொல்வதுதான் மு.க.ஸ்டாலினுக்கு தெரியும். குறை சொல்வதற்கு என இருக்கும் ஒரே கட்சி தி.மு.க.தான். ஆனால், நோயில் கூட தி.மு.க. அரசியல் செய்வது வேதனையாக இருக்கிறது. வேறு எந்த மாநிலத்திலும் இல்லாமல் தமிழகத்தில் மட்டும்தான் சில கட்சிகள் இதுபோல் அரசியல் செய்கின்றன. இது வேதனை தருகிறது.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.
Leave a Reply