நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இம்மூன்று மாவட்டங்களிலும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 81 ஆக உயர்ந்திருக்கிறது.
நெல்லை:
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் தற்போது கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்த மூன்று மாவட்டங்களிலும் நேற்று ஒரே நாளில் புதிதாக 22பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதித்திருந்தது உறுதிப்படுத்தப்பட்டது. எனவே இந்த மூன்று மாவட்டங்களிலும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 81 ஆக உயர்ந்திருக்கிறது.
இதையடுத்து நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நடந்துவரும் சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா நோய் தொற்றால் பாதித்தவர்களின் வீடுகள் மற்றும் அவர்களது வீடு உள்ள பகுதிகளில் கூடுதலாக கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. மேலும் அப்பகுதியை சேர்ந்தவர்களை சுகாதாரத்துறையினரின் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் ஏற்கனவே 40பேருக்கு கொரோனா பாதித்திருந்த நிலையில், தற்போது கூடுதலாக 16பேருக்கு வைரஸ் தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நெல்லை மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்திருக்கிறது. இதில் ஒருவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிவிட்டார் . மற்றொருவர் வெளி மாவட்டத்தில் சிகிச்சை பெற்றுவருகிறார். இதனால் தற்போது நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் நெல்லை மாவட்டத்தினர் 54பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதேபோல் தூத்துக்குடி மாவட்டத்தில் 17 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தார்கள். நேற்று மேலும் 5பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 22 ஆனது. அவர்களில் 5பேருக்கு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுகின்றனர். மற்றவர்களுக்கு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தென்காசி மாவட்டத்தில் 2பேர் மட்டுமே கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டது உறுதியானது. இதனால் தென்காசி மாவட்டத்தில் கொரோனா பாதித்தவரகளின் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது. அவர்கள் 3பேருக்கும் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதனால் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த கொரோனா தொற்று பாதித்த மொத்தம் 62பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு சிகிச்சையளிக்கும் டாக்டர்கள் மற்றும் நர்சுகள் அங்கேயே தங்கி உள்ளார்கள். அவர்கள் கவச உடையணிந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
நெல்லை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உறவினர்கள் சுமார் 171பேர் அடையாளம் காணப்பட்டு இருந்தார்கள். அவர்களில் ஏற்கனவே 83பேருக்கு ரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டது. அவர்களில் சிலருக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மீதமுள்ள 88பேருக்கும் ரத்த பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதில் பெரும்பாலோனோருக்கு ரத்தப்பரிசோதனை முடிந்துவிட்டது. ஆனால் முடிவுகள் இன்னும் வரவில்லை. விரைவில் அவர்களது ரத்த பரிசோதனை முடிவு வரும். அதில் அவர்களுக்கு நோய் தொற்று தாக்கப்பட்டுள்ளது என்று தெரிந்தால் அவர்களுக்கும் சிகிச்சை அளிக்க அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் தற்போது வரை கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து அவர்களது உறவினர்களுக்கு மட்டுமே வைரஸ் தாக்கியுள்ளது தெரியவந்துள்ளது. அவர்களின் மூலம் மற்றவர்களுக்கு வைரஸ் தாக்கவில்லை. எனவே இந்த கொரோனா வைரஸ் மற்றவர்களுக்கு பரவாத வண்ணம் நெல்லை மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
Leave a Reply