கொரோனா வைரசானது நுரையீரலை மட்டுமல்லாது சிறுநீரகத்தையும் பாதிக்கும் என வெளியாகியுள்ள புதிய தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதுடெல்லி,

உலகமெங்கும் பரவி வருகிற கொரோனா வைரஸ் தொற்றுநோய், நோயாளிகளின் நுரையீரலை பாதித்து விடுகிறது. இதனால் சுவாசிக்க முடியாத நிலைக்கு நோயாளிகள் தள்ளப்பட்டு, நிலைமை மோசமாகிறது.

இதுபற்றிய விழிப்புணர்வு இப்போது ஓரளவுக்கு எல்லோருக்கும் வந்து விட்டது.

இந்த நிலையில், இந்த வைரஸ், நுரையீரலை மட்டுமல்லாது சிறுநீரகத்தையும் பாதிக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

சர்வதேச சிறுநீரக சொசைட்டியும் இது தொடர்பாக ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிக்கையில் கூறி இருக்கும் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* 25 முதல் 50 சதவீத கொரோனா நோயாளிகளுக்கு சிறுநீரகமும் பாதிக்கிறது. ‘அக்கியுட் கிட்னி இன்ஜுரி’ என்ற கடுமையான சிறுநீரக காயம் ஏற்படுகிறது.

எனவே கொரோனா வைரஸ், பாதிப்புக்கு ஆளாகிறவரின் நுரையீரல் மட்டுமல்ல, சிறுநீரகமும் பாதிக்க வாய்ப்பு இருக்கிறது.

* சார்ஸ் வைரஸ் போன்ற கொரோனா வைரஸ், சிறுநீரில் கூடுதலான அளவு ரத்தத்தையும், புரதத்தையும் கசிய செய்கிறது. இது 15 சதவீத நோயாளிகளுக்கு சிறுநீரகத்தில் கடுமையான காயத்தை ஏற்படுத்துகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதையொட்டி மும்பை அப்பல்லோ ஆஸ்பத்திரியை சேர்ந்த பிரபல மருத்துவ நிபுணர், டாக்டர் துஷார் பர்மர் அளித்த விளக்கம் வருமாறு:-

பொதுவாகவே கோவிட்-19 (கொரோனா) வகை வைரஸ்கள் சுவாச அமைப்புகளில் (நுரையீரலில்) இருந்து தோன்றுவதாக அறியப்படுகிறது.

இந்த நிலையில், இப்போது வெளியாகி வரும் சான்றுகள், கொரோனா வைரஸ் நுரையீரலை மட்டுமின்றி சிறுநீரகத்திலும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை காட்டுகின்றன.

சார்ஸ் மற்றும் மெர்ஸ் கோவ் தொற்றுகளைப் பற்றிய முந்தைய அறிக்கைகள், 5 முதல் 15 சதவீதம் பேருக்கு சிறுநீரகத்தில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது; இதில் 60 முதல் 90 சதவீதம்பேர் இறந்து விடுகின்றனர் என்பதை காட்டுகின்றன.

கொரோனா வைரசைப் பொறுத்தமட்டில் ஆரம்பத்தில் 3 முதல் 9 சதவீதம் பேருக்கு சிறுநீரகத்தில் கடும் பாதிப்பு ஏற்படுவது தெரிய வந்தது. ஆனால் பின்னர் வந்த அறிக்கைகள், அதை விட கூடுதலான பேருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்படுவதை காட்டுகின்றன.

கொரோனா வைரஸ் பாதித்த 59 பேரை, அவர்கள் ஆஸ்பத்திரியில் இருந்தபோது ஆய்வு செய்ததில், அவர்களில் மூன்றில் இருபங்கு நபர்களுக்கு (19 பேருக்கு) சிறுநீரில் அதிகளவு புரதம் கசிந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

கொரோனா வைரஸ் தாக்கினால் நுரையீரலை மட்டுமல்லாது, சிறுநீரகத்தையும் பாதிக்கும் என்பது பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

About Author

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *