கொரோனா வைரசை சுமந்து செல்லும் துகள்கள் இதற்கு முன்பு நினைத்ததை விட நீண்ட நேரம் காற்றில் இருக்கக்கூடும் என்று பின்லாந்து விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஹெல்சிங்கி:

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி மருத்துவத் துறைக்கு கடும் சவாலாக விளங்கி வருகிறது. இன்றைய நிலவரப்படி 16 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பலி எண்ணிக்கை 96 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

கொரோனா வைரசுக்கு இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. இப்போதைக்கு வைரஸ் தொற்றில் இருந்து தப்பிக்கவும், வைரஸ் பரவாமல் தடுக்கவும் சமூக இடைவெளி தான் ஒரே தீர்வாக கருதப்படுகிறது.

இது ஒருபுறமிருக்க கொரோனா வைரஸ் குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. இதில் பெரும்பாலான ஆய்வுகள் மக்களை அச்சுறுத்தும் வகையிலேயே வருகின்றன.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் இருமும்போது, தும்மும்போது அல்லது பேசும்போது வெளிப்படும் நீர்த்துளி மூலமாக வைரஸ் பரவுகிறது என்பது அனைவரும் அறிந்ததே. அதை மிகவும் ஆழமாக ஆய்வு செய்த விஞ்ஞானிகள் புதுப்புது தகவல்களை வெளியிட்ட வண்ணம் உள்ளனர்.

கொரோனா வைரஸ் பாதித்த நபர் தும்மும்போது அவரது மூக்கில் இருந்து வெளியாகும் நீர் துளிகள் 27 அடி வரை வைரஸ் உடன் பாய்ந்து செல்லும் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வு முடிவை சமீபத்தில் வெளியிட்டனர்.

இந்நிலையில், கொரோனா வைரசை சுமந்து செல்லும் துகள்கள் இதற்கு முன்பு நினைத்ததை விட நீண்ட நேரம் காற்றில் இருக்கக்கூடும் என்று பின்லாந்து விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஒரு நபர் இருமும்போது, தும்மும்போது அல்லது பேசும்போது, மிகச்சிறிய தூசிப்படலம் மூலம் கொரோனா வைரஸ் எவ்வாறு பரவுகிறது என்பதைக் காட்டும் 3டி மாதிரியை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தாக்கத்தின்போது, மக்கள் அதிகம் கூடும் சூப்பர் மார்க்கெட் போன்ற இடங்களை தவிர்ப்பதன் முக்கியத்தை தங்கள் கண்டுபிடிப்பு வயுறுத்துவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

சூப்பர் மார்க்கெட்டுகளில் உள்ள அலமாரிகளுக்கு இடையில் ஒரு நபர் இருமுவதுபோன்ற காட்சியை மையமாக வைத்து ஆராய்ச்சியாளர்கள் 3டி வீடியோவை உருவாக்கி உள்ளனர். இருமிய நபரை சுற்றி காற்றுத்துகள்கள் பரவி மேகம் போன்று திரள்வதைவும், பின்னர் அது கொஞ்சம் கொஞ்சமாக சிதறி மறைவதையும் அந்த வீடியோ மூலம் விளக்கி உள்ளனர். ஆனால் இவ்வாறு நடைபெறுவதற்கு பல நிமிடங்கள் வரை ஆகலாம் என கூறுகின்றனர்.

‘கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட ஒருவர் சாதாரணமாக இருமிவிட்டு அந்த இடத்தில் இருந்து விலகிச் செல்லலாம். ஆனால் கொரோனா வைரசை சுமக்கும் மிகச் சிறிய காற்றுத் துகள்களை அவர் விட்டுச் செல்கிறார். இந்த துகள்கள் பின்னர் அருகிலுள்ள மற்றவர்களின் சுவாசக் குழாய்க்குள் சென்று பாதிப்பை ஏற்படுத்துகிறது’ என பின்லாந்து ஆல்டோ பல்கலைக்கழக துணை பேராசிரியர் வில்லி ஊரினென் தெரிவித்தார்.

About Author

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *