மதுரை: டில்லி தப்லிக் மாநாட்டிற்கு பங்கேற்று திரும்பிய தென் மாவட்டங்களை சேர்ந்த 59 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
மதுரை — 9:
இம் மாநாட்டில் பங்கேற்ற மேலுாரை சேர்ந்த 6 பேர், பேரையூரை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மூலம் மேலும் எட்டு பேர் கொரோனாவால் பாதிப்பிருக்கலாம் என்பதால் அவர்களின் ரத்தம் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கொரோனா உறுதியான ஒன்பது பேர் உட்பட 17 பேர் கொரோனா சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சைக்காக நேற்றிரவு அனுமதிக்கப்பட்டனர்.
திண்டுக்கல் – 17:
இம் மாநாட்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து 90பேர் பங்கேற்றனர். அவர்களில் 48 பேர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 17 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தேனி – 20:
மாநாட்டில் பங்கேற்று தேனி மாவட்டம் திரும்பிய 21 பேர் நேற்று முன்தினம் தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டனர். இதில் போடி 14, பெரிய குளம் 3, உத்தமபாளையம், கம்பம், சின்னமனுார் தலா ஒருவர் வீதம் 20 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதியானது. இவர்கள் சிறப்பு வார்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ஆலோசனை:
தேனி கலெக்டர் அலுவலத்தில் துணை முதல்வர் பன்னீர் செல்வம் தலைமையில் அவசர ஆலோசனை நேற்று நடந்தது. ,ரவீந்திரநாத் குமார் எம்.பி., கலெக்டர் பல்லவி பல்தேவ், சாய் சரண் தேஜஸ்வி எஸ்.பி. மருத்துவ கல்லுாரி முதல்வர் ராஜேந்திரன், மருத்துவத்துறை அலுவலர்கள் உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.
சிவகங்கை – 5:
இம்மாநாட்டில் பங்கேற்ற சிவகங்கையை சேர்ந்த 31 பேரில் 26 பேர் சிவகங்கை அரசு மருத்துவமனையில் முன் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் திருப்புத்துாரைச் சேர்ந்த மூவர், இளையான்குடி, தேவகோட்டையை சேர்ந்த தலா ஒருவர் என 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 21 பேருக்கு அறிகுறி இல்லை என தெரியவந்தது. நேற்று வரை டில்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பிய இம் மாவட்டத்தை சேர்ந்த 45 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி – 6:
திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை கொரோனா வார்டில் ஏற்கனவே சிகிச்சையில் இருந்த ஒரு வாலிபர், டில்லி மாநாட்டிற்கு சென்று திரும்பியவர்கள் 22 பேர் என மொத்தம் 23 பேர் சிகிச்சையில் இருந்தனர். நேற்று கோடீஸ்வரன் நகரை சேர்ந்த 2 பேர், மற்றவர்கள் மேலப்பாளையம் பகுதிகளை சேர்ந்த 4 பேருக்கு நடந்த சோதனையில் கொரோனா பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
துாத்துக்குடி – 2:
துாத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை அடுத்துள்ள பேட்மாநகரில் தந்தை, மகன் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
Leave a Reply