தமிழ் புத்தாண்டையொட்டி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

புதுடெல்லி,

தமிழ் புத்தாண்டையொட்டி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்து கூறியுள்ளார். அவர் தனது வாழ்த்து செய்தியில், தமிழ் புத்தாண்டு, விஷூ உள்ளிட்ட இந்த விழாக்கள் பல்வேறு கலாசாரங்கள், ஒற்றுமை ஆகியவற்றின் அடையாளமாக விளங்குவதாகவும், கொரோனாவின் பாதிப்பால் நாடு இதற்கு முன் எப்போதும் கண்டிராத பெரும் சவாலை சந்தித்து இருப்பதால், மக்கள் சமூக விலகலை பின்பற்றி எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டு கொண்டு உள்ளார்.

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தனது வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

மகிழ்ச்சிக்குரிய தருணமான வைசாகி, விஷு, புத்தாண்டு, மசடி, வைஷ்காடி மற்றும் பகக் பிகு கொண்டாட்டங்களை ஒட்டி நாட்டு மக்களுக்கு எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அறுவடைகளுடன் இணைந்த திருவிழாக்கள் இயற்கையின் அற்புதம் மற்றும் செழிப்பை கொண்டாடும் தருணங்களாகும்.

புதிய கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு எதிரான போராட்டத்தால், சோதனையான காலக்கட்டத்தை நாம் கடந்து கொண்டிருக்கும் நிலையில், இதுபோன்ற திருவிழாக்கள் நமது உத்வேகத்தை புதுப்பித்து வழிகாட்டுதல்களை அளிக்கின்றன.

வளத்தைப் பகிர்ந்து கொள்வதுடன், நமது சக குடிமக்கள் மற்றும் அன்னை பூமியின் மீது அக்கறை காட்டுவதிலும் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். தன்னலமின்மை, அன்பு, கருணை, பரிவு ஆகியவற்றின் மாண்புகள் நமக்குள் பெருகி, அமைதி, நல்லிணக்கம், வளமை மற்றும் மகிழ்ச்சி பெருகுவதாக அமைய வேண்டும் என வாழ்த்துகிறேன்.

நமக்கு வேண்டியவர்களுடன் வீடுகளிலேயே இந்த புத்தாண்டை நாம் கொண்டாடுவோம், பெருமளவு கூடுதல் மற்றும் பெரிய கொண்டாட்டங்களை தள்ளிவைப்போம். வீட்டிலேயே இருங்கள், பாதுகாப்பாக இருங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

About Author

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *