தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3-ம் கட்டத்துக்கு செல்லாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன என்று சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் கூறினார்.
சென்னை,
சென்னையில் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சென்னை வேளச்சேரி வணிக வளாகத்தில் வேலை செய்த அரியலூர் பெண்ணிடம் தொடர்பில் இருந்த 500 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்கள் தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளனர். அவர்களில் யாருக்கும் இதுவரை எந்த ஒரு அறிகுறியும் இல்லை. டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அனைவரும் ஊரடங்கில் உள்ளோம்.
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் அருகில் இருந்தவர்களை செல்போன் வைத்தும் கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3-ம் கட்டத்துக்கு சென்று விடக்கூடாது என்று தான் அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
Leave a Reply