தமிழகத்தில் ஒரே நாளில் 106 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,075 ஆக உயர்ந்தது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 106 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,075 ஆக அதிகரித்து இருக்கிறது.

மேலும் கொரோனா வைரசால் பாதிக்கப் பட்டவர்களில் ஒருவர் நேற்று மரணம் அடைந்ததை தொடர்ந்து, சாவு எண்ணிக்கையும் 11 ஆக உயர்ந்து இருக்கிறது.

இதுகுறித்து சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழகத்தில், வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்து வீட்டு கண்காணிப்பில் இருப்பவர்களின் எண்ணிக்கை 39 ஆயிரத்து 41. மேலும் 58 ஆயிரத்து 189 பேர் 28 நாட்கள் வீட்டு கண்காணிப்பை முடித்து உள்ளனர். தமிழகத்தில் விமான நிலையம் அருகே உள்ள முகாம்களில், அரசு கண்காணிப்பில் 62 பேர் வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இதுவரை தமிழகத்தில் 10 ஆயிரத்து 655 பேருக்கு தொண்டை சளி மற்றும் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. இதில் மொத்தம் 1,075 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்து உள்ளது. இதில் 12-ந் தேதி (நேற்று) ஒரே நாளில் மட்டும் 106 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 16 பேர் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களுக்கு பயணம் செய்தவர்கள். மீதம் உள்ள 90 பேர் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள்.

தமிழகத்தில் நேற்று ஒருவர் இறந்து உள்ளார். இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்து இருக்கிறது. தமிழக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா வைரஸ் பாதித்தவர்களில் இதுவரை 50 பேர், சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். இவர்களில் 6 பேர் நேற்று ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டவர்கள்.

கொரோனா வைரஸ் பாதிப்பை கண்டறிய 14 அரசு பரிசோதனை மையங்கள், 9 தனியார் பரிசோதனை மையங்கள் என தமிழகத்தில் மொத்தம் 23 பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் உள்ள கொரோனா வைரஸ் கண்டறியும் பரிசோதனை மையத்தை வழிகாட்டியாக மத்திய அரசு நியமித்து உள்ளது.

இதன்மூலம் ஒரு நாளைக்கு 2 ஆயிரம் பேருக்கு ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு, பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

34 ஆயிரத்து 792 களப் பணியாளர்கள்

தமிழகத்தில் அதிக மூச்சுத்திணறல் உள்ளவர்களை பரிசோதனை செய்து வருகிறோம். அதில் நேற்று ஒரே நாளில் மட்டும் 49 பேருக்கு தொண்டை சளி மற்றும் ரத்த பரிசோதனை செய்து உள்ளோம். இதில் 2 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இந்த 2 பேரும் ஏற்கனவே கொரோனா வைரசால் பாதிக் கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள்தான்.

தொற்று நோய் கட்டுப்படுத்துதல் திட்டம் தற்போது 34 மாவட்டங்களில் 459 இடங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 20 லட்சத்து 47 ஆயிரத்து 289 வீடுகளில் சோதனை செய்யப்பட்டு உள்ளது. இந்த வீடுகளில் இருந்த 82 லட்சத்து 94 ஆயிரத்து 625 பேருக்கு முதற்கட்ட சோதனைகள் செய்யப்பட்டு உள்ளன. இந்த தொற்று நோய் கட்டுப்படுத்தல் பணியில் 34 ஆயிரத்து 792 களப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

‘உரையாடல் குரல் பதில் முறை’

கடந்த 9-ந் தேதி முதல்-அமைச்சர், மத்திய மந்திரியுடன் இணைந்து, ‘உரையாடல் குரல் பதில் முறை’ திட்டத்தை அறிமுகம் செய்தார். இந்த சேவையை அனைத்து மக்களும் பயன்படுத்த 9499912345 தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த எண்ணை அனைவரும் அழைக்கலாம். இதன்மூலம் உங்கள் தகவல்கள் பெறப்பட்டு, உங்களுக்கு நோய் அறிகுறி உள்ளதா? என்பது தெரியப்படுத்தப்படும். மேலும் சுகாதாரத்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்படும்.

தமிழகத்தில் உள்ள தனியார் பரிசோதனை மையங்கள், கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ள கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அரசு மற்றும் தனியார் பரிசோதனை மையங்கள் இணைந்து செயல்படும் எனவும், அரசு ரத்தமாதிரி அனுப்பி தனியார் ஆய்வகங்களில் செய்யப்படும் பரிசோதனைக்கான செலவை தமிழக அரசு ஏற்கும் என்றும் முதல்-அமைச்சர் அறிவித்து உள்ளார். அதிகமாக பரிசோதனை செய்வதில்தான் தற்போது தனி கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. ஆய்வுக்கு தேவையான பரிசோதனை உபகரணங்கள் போதிய அளவில் உள்ளன.

24 ஆயிரம் பரிசோதனை உபகரணங்கள்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் சென்னை முதல் இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 2 தமிழக அரசு டாக்டர்கள், 2 ரெயில்வே டாக்டர்கள் மற்றும் 4 தனியார் டாக்டர்கள் என மொத்தம் 8 டாக்டர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

துரித பரிசோதனை (ராப்பிட் பரிசோதனை) என்பது வேகமாக பரிசோதனை செய்வதற்கு ஒரு கருவிதான். இதன்மூலம் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி ஆகாது. துரித பரிசோதனை மூலம் கொரோனா வைரஸ் பாதிப்பால் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியில் அதற்கான எதிர்ப்பு உள்ளதா என்று 30 நிமிடங்களில் கண்டறிய முடியும்.

பி.சி.ஆர். பரிசோதனை மூலம் தான் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்படும். தற்போது தமிழகத்தில் 24 ஆயிரம் பி.சி.ஆர். பரிசோதனை உபகரணங்கள் உள்ளன. மேலும் வரும் வாரத்தில் 90 ஆயிரம் பி.சி.ஆர். பரிசோதனை உபகரணங்கள் வந்து சேரும். பி.சி.ஆர். பரிசோதனை மூலம் அனைவரையும் தற்போது வேகமாக பரிசோதனை செய்து வருகிறோம்.

கர்ப்பிணிகள்

கர்ப்பிணிகளுக்கு தனியாக திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது. கர்ப்பிணிகள் குறித்த தகவல்கள் பெறப்பட்டு உள்ளன. இதில் அதிக பாதிப்படையக்கூடிய நிலையில் 11 ஆயிரம் கர்ப்பணிகள் உள்ளனர். அவர்களில் 4 பேருக்கு ஒருவர் என்ற விகிதத்தில் மருத்துவ பணியாளர்கள் நியமிக்கப்பட்டு நல்ல முறையில் பிரசவம் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

மேலும் காய்ச்சலுடன் வரும் கர்ப்பிணிகளுக்கு தேவையான பரிசோதனை செய்ய அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று நோய் சவாலாகத்தான் உள்ளது. எனவே மருத்துவமனைகளில் 10 அடி இடைவேளை விட்டுதான் படுக்கைகள் போடப்பட்டு இருக்கின்றன.

முடிந்தவரையில் தனி அறைகளில் நோயாளிகள் வைக்கப்பட்டு உள்ளனர். டாக்டர்களின் அறிவுரைப்படி குறைந்த அளவு பாதிப்புள்ளவர்களை இடைவெளி விட்ட அறைகளில் வைத்து, பின்னர் அவர்களுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர்களை தனி அறையில் வைக்க ஏற்பாடு செய்யப்படும். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களையும், பாதிப்பு இல்லாதவர்களையும் ஒரே இடத்தில் வைப்பது இல்லை. சில இடங்களில் உறவினர்கள் அங்கு இருக்கிறார்கள். அவர்களையும் அங்கிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

‘பிளாஸ்மா’ பரிசோதனை

ரத்த பரிசோதனை செய்வதற்கான ஒழுங்குமுறை உள்ளது. பரிசோதனை மையங்களில் பணிபுரிகிறவர்கள் அதை தினமும் தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

‘பிளாஸ்மா’ பரிசோதனை செய்ய மத்திய அரசிடம் கேட்டு உள்ளோம். கூடிய விரைவில் அதற்கான அனுமதி கிடைக்கும். தமிழகம் கொரோனா பாதிப்பு, சிகிச்சை குறித்த ஆய்வில் முன்னோடி மாநிலமாக திகழ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மருந்து கண்டுபிடிக்கவும் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றது.

இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *