அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தங்கள் குடிமக்களை திரும்ப அழைத்துக் கொள்ளாத நாடுகளுக்கு ஜனாதிபதி டிரம்ப் விசா தடைவிதித்துள்ளார்.

வாஷிங்டன்:

கொரோனா வைரசால் மிக கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அந்த நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ளது.

அங்கு உயிரிழப்பும் நாளுக்கு நாள் எகிறி வருகிறது. இதன் மூலம் அமெரிக்காவில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை நோக்கி செல்கிறது.

வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அமெரிக்கா விசா

இந்த நிலையில், அமெரிக்காவில் விதிகளை மீறும் வெளிநாட்டினரை தாயகம் அழைத்துக்கொள்ளாத பிற நாடுகள் மீது கடுமையான விசா தடை விதிக்கப்படுவதாக டிரம்ப் அறிவித்தார்.

இதற்கான ஆணையில் அவர் கையெழுத்திட்டார். இந்த ஆணையில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளதாவது:-

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் இந்த நேரத்தில், இங்கு வசிக்கும் தங்கள் நாட்டு மக்களை திரும்ப அழைத்துக்கொள்ள மறுக்கும் அல்லது நியாயமற்ற முறையில் தாமதப்படுத்தும் நாடுகள் மீது விசா தடை விதிக்கப்படுகிறது.

பிற நாடுகளைச் சேர்ந்த மக்கள் பலர் அமெரிக்காவின் விதிமுறைகளை மீறிவருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தும் அவர்களை தங்கள் நாட்டுக்கு அழைத்து செல்லாத நாடுகள் மற்றும் தங்கள் நாட்டுக்கு செல்ல விரும்பும் மக்களை அழைத்து செல்லாத நாடுகளுக்கே இந்த தடை பொருந்தும்.

நாடுகளின் மீது விதிக்கப்பட்டுள்ள இந்த விசா தடை உடனடியாக நடைமுறைக்கு வந்து டிசம்பர் 31-ந்தேதி வரை அமலில் இருக்கும்.

அமெரிக்க விதிமுறைகளை மீறும் பிற நாட்டினரை அவர்கள் நாட்டுக்கே திருப்பி அனுப்புவதில் உறுதியாக இருக்க வேண்டும் என்று பாதுகாப்பு செயலர் மற்றும் அமைச்சர்களிடம் அறிவுறுத்தியுள்ளேன்.

இன்னும் 7 நாள்களுக் குள் தடைவிதிக்கப்படும் நாடுகளின் பட்டியல் பாதுகாப்பு துறை செயலருக்கு அனுப்பப்படும். பட்டியல் கிடைத்ததும் அவர் நடவடிக்கை எடுக்க தொடங்குவார்.

இவ்வாறு அந்த ஆணையில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

About Author

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *