பீஜிங்: பொது மக்களின் ஸ்மார்ட் போன்களில் சிகப்பு, மஞ்சள், பச்சை என க்யூஆர் ஆரோக்கிய குறியீடுகளை ஒதுக்கி, அதன் மூலம் கொரோனா வைரஸ் பரவாமல் கட்டுப்படுத்தி வருகிறது சீனா. இதனை ஜப்பான், ரஷ்யா நாடுகளும் பின்பற்ற தொடங்கியுள்ளன.
கொரோனா வைரஸ் முதலில் பரவத் தொடங்கிய சீனாவின் வூஹான் நகரம் உள்ளிட்ட பல நகரங்களில், மூன்று மாத ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. ஆனாலும் வெளிநாடுகளிலிருந்து திரும்பிய பலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் கட்டுப்பாடுகள் தொடர்கின்றன. பச்சை நிற க்யூஆர் ஆரோக்கிய குறியீடுகளை பெற்றவர்கள் மட்டுமே அலுவலகம், வணிக வளாகம், உணவு விடுதிகளில் அனுமதிக்கப்படுகின்றனர். குறியீடுகள் பெற்றிருப்பதை பல்வேறு நகரங்கள் கட்டாயமாக்கியுள்ளன. ஸ்மோர்ட்போன் இல்லாதவர்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாது.
சீனாவை பின்பற்றி பல்வேறு நாடுகளும் கொரோனாவை வீழ்த்த இதே போன்ற தொழில்நுட்பத்தை பின்பற்றுகின்றன. சிங்கப்பூரில் கடந்த மாதம் தொடர்பாளர்களை கண்டறியும் ஆப் அறிமுகப்படுத்தப்பட்டது. கொரோனா பாதித்த நபரை ஒருவர் சந்தித்திருந்தால், அவர்களை இதன் மூலம் அடையாளம் காணலாம். ஜப்பான் அரசும், சீனாவின் இந்த க்யூஆர் குறியீடு முறையை பயன்படுத்த ஆலோசித்து வருகிறது. ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் க்யூஆர் கோட் முறையை அமல்படுத்தி, ஊரடங்கை கண்காணிக்கின்றனர்.
சீனாவின் இரண்டு பெரிய இணைய நிறுவனங்களான அலிபாபா மற்றும் டென்சென்ட் நிறுவனங்களின் உதவியால், இந்த க்யூஆர் ஆரோக்கிய குறியீடுகளை சீனா செயல்படுத்தி வருகிறது. இவர்களின் அலிபே மற்றும் வீசாட் ஆப்பை ஏற்கனவே கோடிக்கணக்கான சீன மக்கள் பயன்படுத்துக்கின்றனர்.
எப்படி வேலை செய்கிறது க்யூஆர் குறியீடு?
இந்த வண்ண ஆரோக்கிய குறியீடுகளை பெற, பெயர், தேசிய அடையாள எண் அல்லது பாஸ்போர்ட் எண், மொபைல் நம்பரை உள்ளீடு செய்து, கணக்கு துவங்க வேண்டும். அதன் பின், பயண விவரங்கள், கொரோனா உறுதி செய்யப்பட்ட அல்லது சந்தேகிக்கப்படும் நபருடன் ஏதேனும் தொடர்பில் இருந்தோமா போன்ற தகவல்களை கேட்கும், பின்னர், சளி, காய்ச்சல், களைப்பு, தொண்டை வலி ஏதேனும் இருந்தால் கட்டத்தில் குறிக்க வேண்டும். நாம் அளித்த தகவல்களை அதிகாரிகள் உறுதி செய்வார்கள். பின், மாகாண நோய் தடுப்பு தரவுகள் படி சிகப்பு, மஞ்சள், பச்சை குறியீடுகள் ஒதுக்குவார்கள்.
சிகப்பு குறியீடு பெற்றவர்கள் 14 நாட்கள் தனிமை வார்டுகளுக்கு அனுப்பப்படுவார்கள். சிகப்பு குறியீடு கொண்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மஞ்சள் குறி பெறுவார்கள். பச்சை குறி பெற்றவர்கள் சுதந்திரமாக வெளியே செல்லலாம். அவர்கள் நுழையும் ஒவ்வொரு இடத்திலும், க்யூஆர் குறியீடை காட்டி ஸ்கேன் செய்துகொள்ள வேண்டும். இதன் மூலம் அவர்களில் யாருக்கும் கொரோனா ஏற்பட்டால், எளிதில் தொடர்பாளர்களை கண்டறிந்து வைரஸை தடுக்கலாம்.
தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் தொழில்நுட்பம் முக்கியமான பங்கு வகிக்கிறது. வைரஸ் பரவுவதைத் தடுக்க, தொடர்பாளர்களை கண்டறிதல் ஒரு இன்றியமையாத படியாகும், இதனால்தான் உலகெங்கிலும் இதே போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
Leave a Reply