கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக சென்னையில் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று மாநகராட்சி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை,

இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் உள்ள மக்கள் முக கவசம் அணிய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தார். தமிழகத்திலும் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. எனினும் மத்திய, மாநில அரசுகள் பணிவுடன் சொல்வதை கேட்காமலும், கண் முன்பு நிற்கும் கொரோனா ஆபத்தை உணராமலும் பலர் முக கவசம் அணியாமல் வெளியே சென்று வருகின்றனர்.

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் முக கவசம் கட்டாயம் என்று அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவு பிறப்பித்தனர்.

சென்னையிலும் முக கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் நேற்று அதிரடி ஒன்றை பிறப்பித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

வீடுகளில் இருந்து வெளியே வருபவர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று தொற்றுநோய் சட்டம், பொதுசுகாதார சட்டம் உள்ளிட்ட சட்டங்களில் கீழ் உத்தரவிடப்பட்டு உள்ளது. வெளியே பொதுமக்கள் எவ்வளவு நேரம் நடமாடுகிறார்களோ? அதுவரையில் முக கவசம் அணிய வேண்டும். இந்த உத்தரவை மீறி முக கவசம் அணியாமல் வெளியே சென்றால், அவர்கள் வெளியில் செல்வதற்காக வழங்கப்படும் அனுமதி பாஸ் ரத்து செய்யப்படும். மேலும் அவர்களுடைய வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு, 3 மாதங்கள் வைக்கப்படும். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சென்னை, கோவை, திருப்பூர் ஆகிய 3 மாவட்டங்கள்தான் கொரோனா பாதிப்பில் முறையே 3 இடங்களை வகிக்கின்றன. எனவே இந்த 3 மாவட்டங்களில் முக கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து மற்ற மாவட்டங்களிலும் இந்த நடைமுறை பின்பற்றப்படுவது குறித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் சார்பில் விரைவில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள டெல்லி, மும்பை போன்ற இடங்களில் முககவசம் அணிவது ஏற்கனவே கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *