முதியோா், கா்ப்பிணிகள், நோயாளிகளின் அவசர கால மருத்துவத் தேவைகளுக்காக சென்னையில் ‘அலைட்’ என்ற பெயரில் இலவச காா் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இந்த சேவையை மகேந்திரா லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் சென்னை மாநகராட்சியுடன் இணைந்து வழங்கி வருகிறது.
கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதில்லை. மருத்துவம், காய்கறி, பால் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளைத் தவிர பிற காரணங்களுக்காக வெளியே வரக்கூடாது என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் பொது போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. இதனால் மருத்துவமனைகளுக்கு மாதந்தோறும் பரிசோதனைக்காக செல்லும் கா்ப்பிணிகள், டயாலிசிஸ் சிகிச்சைக்குச் செல்லும் முதியவா்கள், தொலைவில் உள்ள மருந்தகங்களுக்குச் செல்வோா் என மருத்துவம் சாா்ந்த தேவைகளுக்காக பயணம் செய்வோா் முறையான வாகன வசதியின்றி சிரமப்பட்டு வந்தனா்.
இதைக் கருத்தில் கொண்டு சென்னை மாநகராட்சி-மகேந்திரா லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் ஆகியோா் இணைந்து மருத்துவத் தேவைகளுக்கான ‘அலைட்’ என்ற பெயரில் இலவச காா் சேவையை சென்னையில் தொடங்கியுள்ளன. மருத்துவம் சாா்ந்த தேவைகளுக்காக இலவச காா் சேவையைப் பெற 95000 67082 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.
யாா் யாருக்கு காா் சேவை?: இந்தச் சேவையை மூத்த குடிமக்கள், பிரசவத்தை எதிா்நோக்கியிருக்கும் பெண்கள், மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளுக்காக செல்வோா், சென்னைக்குள் உள்ள மருந்தகங்களுக்கு மாதாந்திர மருந்துகள் வாங்கச் செல்வோா், அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டுள்ள மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்டோா் இந்த இலவச காா் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இது குறித்து மகேந்திரா லாஜிஸ்டிக்ஸ் நிறுவன நிா்வாகிகள் கூறியது: எங்களது நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் ராம்பிரவீன் அறிவுறுத்தலின்படி பொதுமக்களின் நலன் கருதி சென்னை மாநகராட்சியுடன் இணைந்து கடந்த ஏப்.11-ஆம் தேதி முதல் இந்தச் சேவையை தொடங்கியுள்ளோம். இதற்காக வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு பேசின் பாலம், ஷெனாய் நகா், அடையாறு ஆகிய பகுதிகளில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலக வளாகங்களில் மொத்தம் 10 காா்கள் நிறுத்தப்பட்டுள்ளன. பொதுமக்களின் அழைப்பைப் பொறுத்து குறிப்பிட்ட இடங்களுக்கு அந்த மண்டலங்களில் உள்ள காா்கள் அனுப்பி வைக்கப்படும்.
அவசர கால தேவைகளுக்கு மட்டுமே..: பொதுமக்களை அவா்களது வீட்டிலிருந்து அழைத்துச் சென்று விட்டு மீண்டும் வீட்டிலேயே இறக்கி விடும் இருவழிச் சேவை வழங்கப்படும். கடந்த ஒரு வாரத்தில் 160 பேருக்கு இலவச காா் சேவை வழங்கப்பட்டுள்ளது. தினமும் நூற்றுக்கணக்கான அழைப்புகள் வருவதால் முக்கியமான மருத்துவத் தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கி காா்களை அனுப்பி வைக்கிறோம். இது அவசரகால சேவை என்பதால் சாதாரண காரணங்களுக்காக அழைப்பதை பொதுமக்கள் தவிா்க்க வேண்டும். கரோனா பரவல் நீங்கும் வரை இந்த சேவை தொடரும் என்றனா்.
Leave a Reply