சீன ஆய்வுக்கூடத்தில் கொரோனா வைரஸ் செயற்கையாக உருவாக்கப்பட்டதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து அமெரிக்கா விசாரணை நடத்துவதாக அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளார்.

வாஷிங்டன்,

உலகையே அச்சுறுத்தி வருகிற கொரோனா வைரஸ், சீனாவின் மத்திய நகரமான உகானில் உள்ள கடல்வாழ் உயிரினங்கள் விற்பனை சந்தையில் இருந்து உருவானது என்று நீண்ட காலமாக சொல்லப்பட்டு வருகிறது.

இதுகுறித்த தகவல்கள் வெளி உலகுக்கு வரத்தொடங்கியதும் அந்த சந்தையும் மூடப்பட்டது. இன்று வரை அந்த சந்தை திறக்கப்படவே இல்லை. மூடிதான் கிடக்கிறது.

இந்த நிலையில், “கொரோனா வைரஸ் இயற்கையானது அல்ல; சீனாவில் உகான் நகரில் உள்ள வைராலஜி இன்ஸ்டிடியூட்டின் ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்டது. அது அங்கிருந்து தப்பித்து வந்துள்ளது” என்று அமெரிக்காவின் ‘பாக்ஸ் நியூஸ்’ டெலிவிஷன் பிரத்யேக செய்தி ஒன்றை வெளியிட்டு, உலகமெங்கும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அமெரிக்கா விரிவான விசாரணை நடத்தி வருவதாகவும் அது தெரிவித்தது.

இதுபற்றிய செய்தியை பாக்ஸ் நியூஸ் வெளியிட்டபோது, “அவர்கள் (சீனர்கள்) ஒரு குறிப்பிட்ட வகையான வவ்வாலைப் பற்றி பேசுகிறார்கள். ஆனால் அந்தப் பகுதியில் அந்த வவ்வால் இல்லை. ஈரமான அந்த பகுதியில் அந்த வவ்வால் விற்பனை செய்யப்படவும் இல்லை. 40 மைல் தொலைவில் தான் அந்த வவ்வால் உள்ளது.

அரசாங்கத்துக்கு தெரிந்த தகவல்களின் கால வரிசையை கருத்தில் கொண்டு, உளவுத் துறையினர் விசாரணை நடத்துகிறார்கள். என்ன நடந்தது என்று ஒரு துல்லியமான காட்சியை உருவாக்குகிறார்கள் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன” என்று பாக்ஸ் நியூஸ் டெலிவிஷன் கூறியது.

வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி டிரம்ப் நேற்று முன்தினம் நிருபர்களை சந்தித்தபோது இந்த விவகாரம் எதிரொலித்தது.

அப்போது அவரிடம் நிருபர்கள், “உகான் ஆய்வுக்கூடத்தில் இருந்து கொரோனா வைரஸ் பரவி உள்ளது என்று வெளியான தகவல் தொடர்பாக அமெரிக்கா விசாரணை நடத்துகிறதா?” என்று கேள்வி எழுப்பினர். அதற்கு டிரம்ப் விரிவாக பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அதில் அர்த்தம் இருப்பதாக தெரிகிறது. நாங்கள் அதை விசாரிக்கிறோம். நிறைய பேர் அதை விசாரித்து வருகிறார்கள்.

நிறைய வினோதமான விஷயங்கள் நடக்கின்றன. நிறைய விசாரணைகளும் நடந்து கொண்டிருக்கின்றன. நாங்கள் நடந்தது என்ன? என்று கண்டுபிடிக்கப்போகிறோம்.

சீனாவில் அந்த வைரஸ் எங்கிருந்து வந்திருந்தாலும், எந்த வடிவத்தில் வந்திருந்தாலும், அதன் காரணமாக இப்போது 184 நாடுகள் பாதித்துள்ளன.

உகானில் உள்ள அந்த 4-ம் நிலை ஆய்வுக்கூடத்துக்கு அமெரிக்கா அளித்து வந்த மானியத்தை நிறுத்திக்கொள்ளும். ஒபாமா நிர்வாகம்தான் அந்த ஆய்வுக்கூடத்துக்கு 3.7 மில்லியன் டாலர் (சுமார் ரூ.27 கோடியே 75 லட்சம்) நிதி வழங்கியது. அந்த நிதியை விரைவில் நிறுத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வுக்கூடத்துக்கான நிதியை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தின் இரு சபை தலைவர்களையும் ஏற்கனவே வலியுறுத்தி உள்ளனர் என்பது நினைவுகூரத்தக்கது.

இதற்கு மத்தியில் அமெரிக்க எம்.பி. ஜேம்ஸ் சுமித், “கொரோனா வைரஸ் விவகாரத்தை மூடி மறைப்பதில் சீனா ஈடுபட்டுள்ளது. இந்த வைரசை தடுக்காமல் சீன கம்யூனிஸ்டு அரசு பரவ வைத்து விட்டது. இது சுதந்திர உலகின் ஆரோக்கியத்துக்கும், ஸ்திரத்தன்மைக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. இதில் அவர்களை பொறுப்பேற்க வைக்க வேண்டும்” என்று கூறி இருப்பது பரபரப்பை மேலும் அதிகரிப்பதாக அமைந்துள்ளது.

About Author

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *