சீனாவைப் போன்றே மற்ற நாடுகளும் கொரோனா பாதிப்பு குறித்த தரவுகளை திருத்த வேண்டியிருக்கும் என உலக சுகாதார அமைப்பு சூசகமாக கூறி உள்ளது.

சீனாவைப் போன்று மற்ற நாடுகளும் கொரோனா தரவுகளை திருத்த வேண்டியிருக்கும்- உலக சுகாதார அமைப்பு

சீனாவின் வுகான் நகரை முதன் முதலில் தாக்கிய கொரோனா, இப்போது உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கு பரவி 1.5 லட்சம் உயிர்களை பலி வாங்கி உள்ளது. சீனாவில் அதிகம் பாதிப்படைந்த வுகான் நகரில் கடைசி நிலவரப்படி, கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 2,579 ஆக இருந்தது. நாடு முழுவதும் பலி எண்ணிக்கை 3342 என்ற அளவில் இருந்தது. புதிய நோய்த்தொற்றும் வெகுவாக குறைந்திருப்பதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், உகான் நகரில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கையில் நேற்று திருத்தம் செய்யப்பட்டது.

வுகான் நகரில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்த 2,579 என்ற உயிரிழப்பு எண்ணிக்கை 3,869 ஆக மாற்றம் செய்யப்பட்டது. இது 50 சதவீத உயர்வு ஆகும். ஊரடங்கு காலத்தின்போது மருத்துவமனைக்கு வெளியே இறந்தவர்கள் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தலின்போது இறந்தவர்களின் பெயர்கள் விடுபட்டதாகவும், அந்த வகையில் வுகான் நகரில் இறந்தவர்களின் பட்டியலில் மேலும் 1290 பேர் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் நாடு முழுவதும் மொத்தம் 4632 பேர் பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் பாதிப்பு விஷயத்தில் சீனா உண்மையை மறைக்கிறதோ? என்ற கருத்துக்களும் சந்தேகங்களும் எழுந்தன.

இது குறித்து உலக சுகாதார அமைப்பின் கொரோனா வைரஸ் தொழில்நுட்ப அமைப்பை சேர்ந்த மரியா வான் கெர்கோவ் கூறுகையில், ‘கொரோனா பாதிப்பு குறித்த தரவுகளில் சீனா திருத்தம் செய்திருப்பது, யாருடைய பெயரும் விடுபடாமல் அனைத்தையும் ஆவணப்படுத்தும் முயற்சி. கொரோனா பாதிப்புகள் மற்றும் இறப்புகள் அனைத்தையும் அடையாளம் காணும் பணி ஒரு சவாலாக உள்ளது. பல நாடுகள் சீனா போன்று இதே சூழ்நிலையில் இருக்கப் போகின்றன என நினைக்கிறேன். எனவே உலக நாடுகள் கொரோனா பதிவுகளை மறுஆய்வு செய்து பார்க்க வேண்டும்’ என்றார்.

உலக சுகாதார அமைப்பின் அவசரகால இயக்குனர் மைக்கேல் ரியான் கூறும் போது, ‘அனைத்து நாடுகளும் சீனாவை போன்றே செயல்படும். ஆனால், துல்லியமான புள்ளிவிவரங்களை சீக்கிரம் தயாரிக்க வேண்டும்’ என கேட்டுக்கொண்டார்.

About Author

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *