சீனாவிடம் வாங்கிய கொரோனா வைரஸ் பரிசோதனை கருவிகள் தரமற்றவை என்று ஐரோப்பிய நாடுகள் பகீர் குற்றச்சாட்டு கூறியுள்ளன.

மாட்ரிட்,

தங்கள் நாட்டில் கொரோனா வைரஸ் வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாக சீனாவும், அந்நாட்டின் பிரபல மருத்துவ கருவிகள் தயாரிப்பு நிறுவனங்களும் மேற்கத்திய நாடுகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. கொரோனா வைரசை விரைவாக கண்டறியும் கருவிகள் மற்றும் தரமான முகக் கவசங்கள் தங்களிடம் விற்பனைக்கு உள்ளதாகவும் அறிவிப்பு வெளியிட்டதாக தெரிகிறது.

இதைத்தொடர்ந்து, கொரோனா வைரசை கண்டறியும் பரிசோதனை கருவி களையும், முகக் கவசங்களையும் பல லட்சக்கணக்கில் இங்கிலாந்து, ஸ்பெயின், செக்.குடியரசு, சுலோவாக்கியா உள்ளிட்ட பல்வேறு ஐரோப்பிய நாடுகள் சீனாவிடம் இருந்து வாங்கிக் குவித்தன. ஸ்பெயின் அவசர தேவையாக 6.40 லட்சம் கருவிகளை வாங்க ஆர்டர் செய்தது.

தற்போது, இந்த கருவிகள் அனைத்துமே தரமற்றவை என இறக்குமதி செய்த நாடுகள் பகீர் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளன. ஸ்பெயின் சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், “சீனாவின் பிரபல பயோடெக்னாலஜி நிறுவனம் ஒன்றிடம் இருந்து முதல்கட்டமாக பெறப்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரிசோதனை கருவிகள் 30 சதவீத ஆளவிற்கே முடிவைத் தந்தன. ஆனால் 80 சதவீதம் வரை துல்லிய முடிவுகள் கிடைத்தால் மட்டுமே கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா? என்பதை உறுதிப்படுத்த இயலும்” என்று தெரிவித்தனர்.

செக்.குடியரசு மருத்துவ அதிகாரிகள் அதிருப்தியுடன் பேசும்போது, “தினமும் 10 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்கிறோம். என்றாலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 5 நாட்கள் ஆனவர்களையே இதில் கண்டறிய முடிகிறது” என்றனர்.

சுலோவாக்கியா பிரதமர் இகோர் மோடோவிச் எல்லோருக்கும் ஒருபடி மேலே போய், “உள்ளூர் இடைத்தரகர் ஒருவர் மூலம் சீனாவில் இருந்து 12 லட்சம் பரிசோதனை கருவிகளை வாங்கினோம். ஒன்றிலுமே உருப்படியான முடிவு கிடைக்கவில்லை. இவற்றையெல்லாம் கொண்டுபோய் தனுபே ஆற்றில்தான் வீசவேண்டும்” என்று ஆவேசப்பட்டார்.

இங்கிலாந்து பொது சுகாதாரத்துறை உயர் அதிகாரி ராபர்ட் பெஸ்டோன், ‘சீன மருத்துவ கொரோனா வைரஸ் பரிசோதனை கருவிகளின் முடிவுகள் முற்றிலும் தெளிவற்று காணப்படுவதாக’ கருத்து தெரிவித்ததாக ஐ.டி.வி. நியூஸ் கூறுகிறது.

இதனால் இந்த முடிவுகளை அதிகாரப்பூர்வமாக வெளியிட அவர் தயங்குவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

‘ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் எளிய இறக்குமதி கொள்கைகளை பயன்படுத்தி, கிடைத்த சந்தர்ப்பத்தை வைத்து மருத்துவ கருவிகள் தயாரிக்கும் சீன நிறுவனங்கள் பெருமளவில் விளையாடி விட்டன’ என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

ஆனால் தங்கள் நாட்டு மருத்துவ கருவிகள் பற்றி ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் குற்றம்சாட்டுவதை சீனா மறுத்துள்ளது.

இதுபற்றி சுலோவாக்கியா நாட்டிற்கான சீனத் தூதரகத்தின் பெண் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “சுலோவாக்கியாவில் சீன நிறுவனங்களின் மருத்துவ கருவிகளை யாருக்கும் சரியாக கையாளத் தெரியவில்லை. எனவேதான் அவர்களுக்கு துல்லிய முடிவுகள் கிடைக்கவில்லை” என்று மறுத்தார்.

“ஏற்றுமதி கொள்கையில் நாங்கள் ஒருபோதும் இரட்டை நிலைப்பாட்டை பின்பற்றுவதில்லை” எனவும் சீன அரசு கூறுகிறது. அதேநேரம், ‘இனிமேல் தனது நாட்டின் மருத்துவ நிறுவனங்கள் மருத்துவ கருவிகளை ஏற்றுமதி செய்வதற்கு முன்பாக தக்க தகுதிச் சான்றுகளை பெறவேண்டும்’ என்ற புதிய உத்தரவை சீன அரசு பிறப்பித்து இருப்பது, குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *