சிவப்பு மண்டல பகுதிகளில் தற்போதைய ஊரடங்கு நடைமுறை தொடர்ந்து இருக்கும் என்று முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை,
சென்னை தலைமைச்செயலகத்தில் முதல் அமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- “ அரசின் சிறப்பான பணிகளை எதிர்கட்சிகள் திட்டமிட்டு தவறாக விமர்சனம் செய்கின்றன. மத்திய அரசிடம் தேவையான நிதியை கேட்டுள்ளோம். எதிர்கட்சி எம்.பி.க்கள் மத்திய அரசிடம் தமிழகத்திற்கான நிதியை கேட்கவில்லை. நோயை வைத்து எதிர்கட்சிகள் அரசியல் செய்வது வேதனை அளிக்கிறது. வெளிமாநிலத்தில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யப்பட்ட நோய் கொரோனா.
ஏப்.20க்கு பிறகான நடவடிக்கைகள் குறித்து நிதித்துறை செயலாளர் தலைமையிலான குழு ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும். ரம்ஜான் நோன்பு காலம் தொடங்க உள்ள நிலையில் முன்னேற்பாடுகள் குறித்து அரசு ஆலோசிக்க உள்ளது. தமிழக தலைமை காஜியுடன், தலைமை செயலாளர் இன்று மாலை ஆலோசனை நடத்த உள்ளார். தடை செய்யப்பட்ட பகுதியில் உள்ள மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி வழங்கி வருகிறோம். உணவுப் பொருட்கள் வெளிமாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு வினியோகப்படுகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் அரசின் நடவடிக்கையால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
சிவப்பு பகுதிகளில் தற்போதைய ஊரடங்கு நடைமுறை தொடர்ந்து இருக்கும். 15 பேருக்கு அதிகமாக கொரோனா பாதித்துள்ள மாவட்டங்கள் சிவப்பு பகுதிக்குள் வரும். தமிழகத்தில் குணமடைபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும். மாநிலத்துக்கு தேவையான நிதியை ஒதுக்குமாறு மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஒரு மாதத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. மலர்கள் வீணாவதை தடுக்க வாசனை திரவிய தொழிற்சாலைகளுடன் பேசி தீர்வு காணப்பட்டுள்ளது. விவசாயிகளின் விளைபொருட்கள் வீணாகாமல் விற்பனை செய்ய அரசு நடவடிக்கை. காய்கறி விலையேற்றம் என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு முற்றிலும் தவறு. போன மாதம் 20 ரூபாய்க்கு விற்ற தக்காளி தற்போது 15 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கடந்த மாதத்தை ஒப்பிடும் போது காய்கறிகளின் விலை கணிசமாக குறைந்துள்ளது” என்றார்.
தமிழகத்தில் சிவப்பு மண்டல மாவட்டங்கள் எவை?
தமிழகத்தில் கொரோனா வைரஸூக்கு அதிகம் பாதிப்பிற்குள்ளான மாவட்டங்கள் பட்டியலை நேற்று மத்திய அரசு வெளியிட்டுள்ளது. சென்னை, திருச்சி, கோவை, நெல்லை, ஈரோடு, வேலூர், திண்டுக்கல், விழுப்புரம், திருப்பூர், தேனி, நாமக்கல், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் அதில் இடம்பிடித்துள்ளன. மதுரை, தூத்துக்குடி, கரூர், விருதுநகர், கன்னியகுமரி, கடலூர், திருவள்ளூர், திருவாரூர், சேலம், நாகை ஆகிய மாவட்டங்களும் இதில் இடம் பிடித்துள்ளன.
Leave a Reply