கொரோனா வைரஸ் பிடியில் இருந்து உகான் நகரம் மீண்டது எப்படி என்பது பற்றி அங்குள்ள பிரபல மருத்துவ நிபுணர் விளக்கி உள்ளார்.

உகான்,

சீனாவின் மத்திய நகரமான உகானைப்பற்றி இப்போது உலக மக்கள் அத்தனை பேருக்கும் தெரிந்திருக்கிறது. அந்த அளவுக்கு உகான் நகரம் மக்கள் மனங்களுக்கு நெருக்கமாகி விட்டது. அந்த நகரம் இப்போது கொரோனா வைரஸ் என்ற கொலைகார வைரஸ் பரவலில் இருந்து விடுதலை பெற்றிருக்கிறது.

கொரோனா வைரசுக்கு எதிரான போரில், அந்த நகரத்தில் உள்ள லீ சென்சான் ஆஸ்பத்திரி முக்கிய பங்கு ஆற்றியது. இந்த ஆஸ்பத்திரியின் தலைவர் வாங் ஜிங்குவான்தான், உகான் பல்கலைக்கழகத்தின் ஜாங்னான் ஆஸ்பத்திரியின் தலைவரும் ஆவார்.

கொரோனா வைரஸ் தொற்றுநோயை கட்டுப்படுத்துவதில் தனக்கு கிடைத்த அனுபவங்கள் குறித்து மருத்துவ நிபுணரான அவர் உள்ளூர் ஊடகங்களுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கொரோனா வைரசின் பிடியில் இருந்து மீண்டது தொடர்பான ரகசியங்களை வெளிப்படுத்தினார். அவர் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் பரவத்தொடங்கியதும், பாதிப்புக்குள்ளானவர்களுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களுக்கும் இந்த வைரஸ் பரவத்தொடங்கியது. அந்த டாக்டர்கள் யாரும் முக கவசங்கள் அணியவில்லை.

உகானில் மட்டுமே 30 ஆயிரம் மருத்துவ பணியாளர்கள் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளானார்கள். அப்போதுதான் நாங்கள் முக கவசங்கள் அணிய வேண்டியதின் முக்கியத்துவத்தை உணர்ந்தோம். ஆரம்பத்தில் ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கியது என்றால் அது அந்த ஒட்டு மொத்த குடும்பத்துக்கும் பரவியது.

இதனால் ஒவ்வொரு வீட்டிலும் 3 பேர், 4 பேர், 5 பேர் சர்வசாதாரணமாக இந்த வைரஸ் தொற்றுநோயின் பிடியில் சிக்கினார்கள். இதுவும் எங்களுக்கு பாடம் ஆனது. இதனால் ஆஸ்பத்திரிகளில் இடப்பிரச்சினை, படுக்கை பிரச்சினை ஏற்பட்டது. அப்போதுதான் அரசு நிர்வாகம் இந்தப் பிரச்சினையை சரியாகப் புரிந்து கொண்டது.

வைரஸ் நோயின் தீவிரத்தை உணர்ந்து நகரத்தில் உள்ள பொது கட்டிடங்கள், உடற்பயிற்சி கூடங்கள், பொருட்காட்சி மையங்கள் அத்தனையும் தற்காலிக ஆஸ்பத்திரிகளாக மாற்றப்பட்டன. இப்படி 16 தற்காலிக ஆஸ்பத்திரிகள் திறக்கப்பட்டன.

கொரோனா வைரசுக்கான சின்னச்சின்ன அறிகுறிகள் தென்பட்டாலும், அவர்களை எல்லாம் மீட்டு இந்த தற்காலிக ஆஸ்பத்திரிகளில் தனிமைப்படுத்தியதுதான் வெற்றிக்கதையாக அமைந்தது.வீடுகளில் தனிமைப்படுத்தி வைத்திருந்தால்கூட வீட்டில் உள்ள மற்றவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பு உண்டு.

ஆனால் அவர்களை தனிமைப்படுத்தி இப்படிப்பட்ட மைங்களில் கொண்டு போய் சேர்க்கிறபோது, கொரோனா வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புகள் குறைகின்றன. இப்படி பரவுவதை கட்டுப்படுத்தாவிட்டால், அந்த வைரஸ் காட்டுத்தீ போல பரவத் தொடங்கி விடும்.

இந்த வைரஸ் பரவலைத் தவிர்ப்பதற்கு குறைந்தது 3 அம்சங்கள் மீது கவனம் செலுத்த வேண்டும்.

1. நோய்த்தொற்றின் ஆதாரம் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.

2. பரிமாற்றபாதை கட்டுப்படுத்தப்பட வேண்டும்.

3. பாதிக்கப்படக்கூடிய மக்களை கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும்.

உகானைப்பொறுத்தமட்டில் உள்ளூர் ஆஸ்பத்திரிகள் தொற்றுநோயாளிகளால் நிரம்பி வழிந்தபோது, ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களுக்கு இடையே இரண்டே வாரங்களில் ஹுசென்சான், லீ சென்சான் என 2 ஆஸ்பத்திரிகள் கட்டி முடிக்கப்பட்டன.

கொரோனா பரவுவதை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றியது, முக கவசங்கள். அடுத்து லேசான அறிகுறிகளுடன் இருந்தவர்களை கூட வீட்டில் தனிமைப்படுத்தாமல், ஆஸ்பத்திரிகளில் தனிமைப்படுத்தியது. இவ்விரண்டும்தான் உகான், மீண்டு வர காரணம் ஆயிற்று. இவ்வாறு அவர் கூறினார்.

கொரோனா வைரஸ் பிடியில் இருந்து மீண்டுள்ள நிலையில் இப்போது அங்கு 2 மாதத்துக்கும் மேலாக இருந்து வந்த ஊரடங்கு விலக்கி கொள்ளப்பட்டு, இயல்பு நிலை திரும்பி உள்ளது.

About Author

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *