கொரோனா வைரஸ் தோற்றம் பற்றிய விவகாரத்தில் சர்வதேச அளவில் வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் என்று டிரம்புக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாஷிங்டன்,

அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு, அந்த நாட்டின் செல்வாக்கு மிக்க குடியரசு கட்சியின் செனட் சபை எம்.பி. மார்கோ ரூபியோ தலைமையிலான எம்.பி.க்கள் குழு நேற்று முன்தினம் கூட்டாக ஒரு கடிதம் எழுதி உள்ளனர்.

அந்த கடிதத்தில் அவர்கள், “கொரோனா வைரசின் தோற்றம், உலக சுகாதார நிறுவனத்தின் முடிவு ஆகியவை பற்றிய வெளிப்படையான விசாரணையை தொடர நட்பு நாடுகளான ஜப்பான், தென்கொரியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து செயல்பட வேண்டும்” என்று வலியுறுத்தி உள்ளனர்.

டிரம்புக்கு எழுதிய அந்த கடிதத்தில், மார்ஷா பிளாக்பர்ன், தாம் டில்லிஸ், ஜான் கார்னின், ரோஜர் விக்கர், டெட் குரூஸ், டான் சல்லிவன், மைக் லி ஆகிய எம்.பி.க்கள் கையெழுத்து போட்டுள்ளனர்.

கடிதத்தில் கூறி இருக்கும் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* சீனாவின் உகானில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று நோயை ஆரம்பத்தில் இருந்தே சீன கம்யூனிஸ்டு கட்சி மறைப்பதற்கும், திசை திருப்புவதற்கும் மட்டுமின்றி அமெரிக்காவையே நேரடியாக குற்றம்சாட்டுவதற்கும் முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளது.

* கொரோனா வைரஸ் தொற்றுநோய், கட்டுப்பாட்டுக்குள் வந்த உடன், அது எங்கே தோன்றியது என்பது பற்றியும், உலக சுகாதார நிறுவனம் உள்ளிட்ட பன்னாட்டு அமைப்புகளை சீனா தனக்கு ஆதரவாக தவறாக பயன்படுத்துவது பற்றியும், உண்மையான, முழுமையான சர்வதேச விசாரணை நடத்த வேண்டும்.

* இது தொடர்பாக நமது நட்பு நாடுகளான ஜப்பான், தென்கொரியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் நமது வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோவும், அமெரிக்க நிர்வாகமும் இணைந்து பணியாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* கொரோனா வைரசுக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் விசாரணைக்காக சர்வதேச அளவில் ஒருங்கிணைப்பதற்காக நீங்கள் ஒரு உயர்மட்ட குழுவை அமைக்க வேண்டும்.

* விசாரணையானது, கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியபோது, உலக சுகாதார நிறுவனம், முடிவு எடுத்தது பற்றிய விரிவான புரிதலுக்கும் வழி வகுக்க வேண்டும். கொரோனா வைரஸ் பரவலை மறைப்பதற்கு உலக சுகாதார நிறுவனத்துக்கு சீனாவிடம் இருந்து அழுத்தம் வந்ததா? என்பது குறித்தும் விசாரிக்கப்பட வேண்டும். விசாரணையானது வெளிப்படையாக இருக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறி உள்ளனர்.

கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனாவுக்கு ஆதரவாக உலக சுகாதார நிறுவனம் செயல்பட்டு வருகிறது என்பதுதான் அமெரிக்காவின் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது.

இப்போது இந்த விவகாரத்தில் சர்வதேச அளவிலான விசாரணை வந்தால், அது சீனாவுக்கும், உலக சுகாதார நிறுவனத்துக்கும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *