கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில், குடும்ப வன்முறைகள் அதிகரித்து வருவதால், பெண்கள் பாதுகாப்புக்கு முதல் இடம் கொடுக்க வேண்டும் என்று உலக நாடுகளுக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா வைரசுக்கு மத்தியில் குடும்ப வன்முறை அதிகரிப்பு – ஐ.நா. பொதுச்செயலாளர் வேதனை
ஐ.நா. சபை பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ்
நியுயார்க்:
சர்வதேச வணிக நாளிதழான ‘பைனான்சியல் டைம்ஸ்’ நாளிதழ், கடந்த சனிக்கிழமையன்று ஒரு ஆராய்ச்சி கட்டுரை வெளியிட்டது.
அந்த கட்டுரையில் இடம் பெற்றிருந்த முக்கிய தகவல், கொரோனா வைரஸ் பரவத்தொடங்கிய காலம்தொட்டு பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை பெருகி உள்ளது என்பதுதான்.
மேலும், கொரோனா வைரஸ் தோன்றிய சீன நாட்டில் முக்கிய நகரங்களில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து விவாகரத்து கோரி வழக்குகள் தொடர்வது அதிகரித்துள்ளதாக அந்த ஆராய்ச்சியில் தெரிய வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதுகாப்பில் மக்கள்
மேலும், சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் உள்ள கியாஞ் சியாங் நகரத்தில், பிப்ரவரி மாதத்தில் மட்டுமே 82 குடும்ப வன்முறை வழக்குகள் தாக்கலாகி உள்ளன. கடந்த ஆண்டில் இதே கால கட்டத்தில் 47 வழக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளது. இப்போது கொரோனா வைரஸ் பரவி வந்த நிலையில், இங்கு இந்த வழக்குகள் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது என்று அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெசுக்கு வேதனையை அளித்துள்ளது.
இதையொட்டி அவர் டுவிட்டரில் ஒரு வீடியோ செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
கொரோனா வைரசை தடுப்பதற்கு ஊரடங்கும், தனிமைப்படுத்தலும் அவசியம் என்பதை நாம் அறிவோம்.
ஆனால் இந்த காலகட்டத்தில் பெண்களும், பெண் பிள்ளைகளும் வீடுகளில் இருப்பவர்களால் தொல்லைக்கு ஆளாகிறார்கள்.
கடந்த சில வாரங்களாக, பொருளாதார மற்றும் சமூக அழுத்தங்கள் அதிகரித்துள்ளன. பயமும் வளர்ந்து இருக்கிறது.
உலகளவில், குடும்ப வன்முறைகள் பெருகி வருவதை நாங்கள் பார்க்க முடிகிறது.
பாதிக்கப்பட்ட பெண்கள், ஆதரவுச் சேவையை அழைப்பது இரு மடங்காக அதிகரித்து உள்ளது.
கொரோனா வைரசை தடுப்பதற்காக உலக நாடுகள் பலவற்றிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், எந்த இடங்கள் பெண்களுக்கு மிகுந்த பாதுகாப்பானதாக இருக்க வேண்டுமோ, இந்த இடங்களில், அதாவது அவர்களின் சொந்த வீடுகளிலேயே அவர்கள் வன்முறையை எதிர்கொள்கிறார்கள்.
உலகம் எங்கும் உள்ள வீடுகளில் அமைதியும், சமாதானமும் நிலவவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
கொரோனா தொற்று நோய் பரவலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கிறபோது, பெண்களின் பாதுகாப்புக்கு முதல் இடம் கொடுக்க வேண்டும் என்று அனைத்து நாடுகளின் அரசுகளை நான் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Leave a Reply