கொரோனா வைரசுக்கு எதிராக கொள்கை வகுத்து நடவடிக்கை எடுப்பதில் இந்தியா சரியான திசையில் செல்கிறது என்று சர்வதேச அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
உலக நாடுகளை கலக்கத்தில் ஆழ்த்தி வருகிற கொரோனா வைரசுக்கு எதிரான நடவடிக்கையில் இந்தியா நாட்டு மக்கள் அனைவரையும் ஒன்றுபடுத்தி, 21 நாள் ஊரடங்கை பின்பற்ற வைத்துள்ளது. சமூக இடைவெளியும் சரியாக பின்பற்றப்பட்டு வருகிறது. ஊரடங்கு காலத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள மக்கள் பாதிப்பை அடையாத வகையில், மத்திய அரசு ரூ.1.70 லட்சம் கோடி பொருளாதார சலுகை திட்டங்களையும் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், கொரோனா வைரசுக்கு எதிராக கொள்கை வகித்து, நடவடிக்கைகள் எடுப்பதில் இந்தியா சரியான திசையில் செல்கிறது என்று சர்வதேச அமைப்பான ஆசிய, பசிபிக் நாடுகளுக்கான ஐ.நா. பொருளாதார, சமூக கமிஷன் பாராட்டு தெரிவித்துள்ளது.
இதையொட்டி அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கொரோனா வைரஸ் பிரச்சினை காரணமாக ஆசிய, பசிபிக் பிராந்தியத்தில் பொருளாதார மந்த நிலையை நிராகரித்து விட முடியாது. பொருளாதாரம் அதலபாதாளத்துக்கு செல்லும். கொரோனா வைரஸ் பிரச்சினையை சுற்றி நிச்சயமற்ற நிலைமை குறிப்பிடத்தக்க அளவுக்கு நிலவுகிறது. இது எதிர்மறை தாக்கத்துக்கு வழிநடத்தும்.
முன்னெப்போதும் இல்லாத சுகாதார நெருக்கடிகளை அரசுகள் சந்திக்கும். இருப்பினும் அதற்கு பதில் அளிக்கிற வகையில் பொருளாதார சலுகை திட்டங்களை அறிவித்து செயல்படுத்துகின்றன. ஆசிய-பசிபிக் நாடுகள் சுகாதார தேவைகளை கவனிப்பதற்கான அவசர செலவினங்களை ஆண்டுக்கு 880 மில்லியன் டாலர்களாக (சுமார் ரூ.6,510 கோடி) அதிகரிக்க வேண்டும்.
சுகாதார பிரச்சினைகளுக்கு பதில் அளிப்பவர்களின் கண்காணிப்பு திறனை மேம்படுத்துவதில் நிதி செலவினங்களும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்யும். மேலும், தொற்றுநோய் பரவுதலை தடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் சுகாதார அவசர தயார்நிலையை மேம்படுத்தும்.
கொள்கை வகுப்பவர்கள் (அரசுகள்) மக்கள் மற்றும் அவர்கள் வாழும் பூமி கோள் மீதான பார்வையை இழக்கக் கூடாது. பொருளாதார சலுகை திட்டங்களை வடிவமைக்கிறபோது, ஒவ்வொரு முடிவின் போதும், சமூக உள்ளடக்கம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை ஆகியவை இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Leave a Reply