சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நவீன கருவி மூலம், கொரோனா தொற்றை கண்டறியும் சோதனை சென்னையில் நேற்று தொடங்கியது. இந்த சோதனையின் முடிவு 25 நிமிடங்களில் தெரிந்துவிடும்.

சென்னை,

இந்தியாவில் கொரோனா நோய் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

ஏற்கனவே உள்ள பரிசோதனை முறை மூலம், ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளதா? இல்லையா? என்பதை கண்டறிவதில் மிகுந்த தாமதம் ஏற்படுகிறது.

இதனால் விரைவாக சோதனை நடத்தி முடிவை கண்டறிய உதவும் ‘ரேபிட் டெஸ்ட் கிட்’ என்ற நவீன துரித பரிசோதனை கருவிகளை சீனாவில் இருந்த இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கான ஆர்டரையும் கொடுத்தது.

இதேபோல், தமிழக அரசும் தனிப்பட்ட முறையில் சீனாவிடம் இருந்து அந்த கருவிகளை வாங்குவதற்கு ‘ஆர்டர்’ கொடுத்து இருந்தது.

இந்த நிலையில், ஓரிரு நாட்களுக்கு முன் 3 லட்சம் துரித பரிசோதனை கருவிகள் சீனாவில் இருந்து இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

தமிழக அரசு தனிப்பட்ட முறையில் ஆர்டர் செய்திருந்த 24 ஆயிரம் கருவிகளும் நேற்று முன்தினம் தமிழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அத்துடன், இந்திய அரசின் சார்பில் ஆர்டர் செய்யப்பட்ட தொகுப்பில் இருந்து தமிழகத்துக்கு 12 ஆயிரம் கருவிகள் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த கருவிகள் மீதான தர பரிசோதனை நடந்து வந்தது.

அது முடிந்ததை தொடர்ந்து, கொரோனா பரிசோதனைக்காக தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும் துரித பரிசோதனை கருவிகள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

அந்த வகையில் திருநெல்வேலி, கோவை, ஈரோடு, வேலூர், சேலம், மதுரை, திருச்சி ஆகிய 7 மாவட்டங்களுக்கு தலா 1,000 துரித பரிசோதனை கருவிகள் அனுப்பி வைக்கப்பட்டன. சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு 1,000 கருவிகள் ஒதுக்கப்பட்டன.

மேலும் மீதம் இருக்கும் துரித பரிசோதனை கருவிகள் மற்ற மாவட்டங்களுக்கு விரைவில் பிரித்து அனுப்பப்படும் என்றும், அந்த கருவிகள் மூலம், மாவட்ட அரசு ஆஸ்பத்திரிகளுக்கு காய்ச்சல், சளி, இருமல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு துரித பரிசோதனை செய்யப்படும் என்றும் சுகாதாரத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் நேற்று துரித பரிசோதனை கருவிகள் மூலம் கொரோனாவை கண்டறியும் பரிசோதனை தொடங்கியது.

ஆஸ்பத்திரி ‘டீன்’ டாக்டர் ஜெயந்தி தலைமையில், கொரோனா அறிகுறிகள் காணப்பட்ட நோயாளிகள் சிலருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஒவ்வொரு நோயாளியாக பரிசோதனை நடத்தப்பட்டது. இதற்காக துரித பரிசோதனை கருவிகள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. அந்த பகுதியில் வேறு யாரும் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

பின்னர் இந்த துரித பரிசோதனை முறை குறித்து ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி ‘டீன்’ டாக்டர் ஜெயந்தி கூறியதாவது:-

‘ரேபிட் டெஸ்ட் கிட்’ கருவி என்பது ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளதா?, இல்லையா? என்பதை விரைவாக கண்டுபிடித்து தெரிவிக்கும் கருவி ஆகும்.

இந்த கருவியில் 2 குமிழ்கள் உள்ளன. இதில் ஒரு குமிழில் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுபவரின் விரல் நுனியில் இருந்து சேகரிக்கப்படும் ஒரு துளி ரத்தம் இடப்படுகிறது. இன்னொரு குமிழில் ‘கன்ட்ரோல் சொல்யூசன்’ எனும் திரவம் ஒரு துளி விடப்படுகிறது.

இந்த பரிசோதனையின் முடிவு 25 நிமிடங்களில் நமக்கு தெரிய வந்துவிடும்.

கருவியில் உள்ள திரையில் ஒரு கோடு வந்தால் சம்பந்தப்பட்ட நபருக்கு கொரோனா தொற்று இல்லை என அறியலாம். 2 கோடுகள் வந்தால் அந்த நபருக்கு கொரோனா தொற்று இருக்கிறது என்று உறுதி செய்யப்படுகிறது.

இந்த துரித பரிசோதனை கருவிகள் மூலம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட நபருக்கு ‘ஆர்.டி., பி.சி.ஆர்.’ பரிசோதனை மேற்கொள்ளப்படும். இதில் ஐ.ஜி.எம்., ஐ.ஜி.ஜி. பரிசோதனைகள் உட்படாது.

அதேவேளை கொரோனா தொற்று இல்லை (‘நெகட்டிவ்’) என்று வந்திருந்தாலும், சம்பந்தப்பட்ட நபருக்கு சளி, இருமல், மூச்சுத்திணறல், தும்மல் போன்ற அறிகுறிகள் இருக்கும் பட்சத்தில் அவருக்கு அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

தற்போது ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு முதற்கட்டமாக ஆயிரம் கருவிகள் வந்து உள்ளன. இன்னும் கருவிகள் வேண்டும் என கேட்டு இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா அறிகுறி உள்ளவர்கள், புறநோயாளிகள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு இந்த கருவி மூலம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.

About Author

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *