தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு கடந்த மார்ச் மாதம் 2-ந்தேதி தொடங்கி 24-ந்தேதி நடந்து முடிந்தது. 8 லட்சம் மாணவ- மாணவிகள் இந்த தேர்வை எழுதினார்கள்.
தேர்வு எழுதும் போதே கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. இதனால் பிளஸ்-1 தேர்வில் ஒரு பரீட்சையும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முழுமையாகவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணியும் ஒத்திவைக்கப்பட்டது. மார்ச் 31-ந்தேதி விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்குவதாக இருந்தது. 44 மையங்களில் 20 ஆசிரியர்கள் இந்த பணியில் ஈடுபட திட்டமிட்டிருந்தார்கள்.
ஆனால் கொரோனாவால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 7-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் விடைத்தாள் திருத்தும் பணி தேதி குறிப்பிடப்படாமல் மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனால் பிளஸ்-2 தேர்வு முடிவு வெளிவர தாமதமாக வாய்ப்பு உள்ளது. ஏப்ரல் 24-ந்தேதி பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் தற்போது கொரோனா வைரஸ் தாக்குதல் தீவிரம் அடைந்து வருவதால் தேர்வு முடிவு மே மாதம் இறுதிக்கு தள்ளிப்போக வாய்ப்பு உள்ளது.
கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்ததும் படிப்படியாக மக்களுடைய இயல்பு வாழ்க்கை திரும்பும்.
Leave a Reply