கொரோனா பரவல் தடுப்பு பணியில் உள்ள அரசு ஊழியர்களுக்கு தொற்று ஏற்பட்டால், அவர்களுக்கு ரூ.2 லட்சம் கருணைத் தொகையும், இலவச சிகிச்சையும் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தமிழக தலைமைச் செயலாளர் கே.சண்முகம் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கொரோனா தடுப்பு, பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பது, தனிமைப்படுத்துவது மற்றும் சிகிச்சை அளிப்பது ஆகிய பணிகளில் ஈடுபட்டுள்ள சுகாதாரத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, காவல்துறை அதிகாரிகள், ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றில் பணியாற்றும் பணியாளர்கள் ஆகியோருக்கு முக கவசம், கையுறைகள், காலணிகள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் அளிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதை முதல்- அமைச்சர் கண்டிப்புடன் வலியுறுத்தி இருக்கிறார்.

அவர்கள் பணியில் இருக்கும்போது கொரோனாவினால் பாதிப்புக்கு உள்ளாகிவிடக்கூடாது என்பது உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தாண்டி முன்னிலையில் பணியாற்றும் பணியாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படும்பட்சத்தில் என்னென்ன செய்ய வேண்டும் என்பது பற்றி கடந்த 2-ந் தேதியன்று முதல்-அமைச்சர் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது.

அப்படி பாதிக்கப்படும் தனி நபர்களுக்கு அரசு மருத்துவமனை அல்லது தனியார் மருத்துவமனைகளில் ஆகும் மருத்துவ செலவை அரசே ஏற்க வேண்டும் என்றும், ரூ.2 லட்சம் கருணைத் தொகையையும் அவர் களுக்கு அரசு வழங்க வேண்டும் என்றும் முதல்- அமைச்சர் உத்தரவிட்டு இருந்தார்.

இது சம்பந்தமாக வருவாய் நிர்வாக ஆணையர், அரசுக்கு கடிதம் எழுதி இருந்தார். அதில், கொரோனா தடுப்பு தொடர்புடைய பணியில் இருக்கும்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட அரசு ஊழியர் அல்லது உள்ளாட்சி அமைப்புகளின் ஊழியர்களுக்கு இலவச சிகிச்சையை அரசு மருத்துவமனையிலோ அல்லது தனியார் மருத்துவமனையிலோ வழங்க வேண்டும்.

அவர்களுக்கு கருணைத் தொகையாக ரூ.2 லட்சமும் அளிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளார். மேலும், இந்த உத்தரவை வரும் மே 31-ந் தேதிக்குப்பிறகு மறுபரிசீலனை செய்து, அந்த சூழ்நிலையில் முடிவு எடுத்துக் கொள்ளலாம் என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். வருவாய் நிர்வாக ஆணையரின் இந்த முன் மொழிவை அரசு ஏற்று அதற் கான உத்தரவை பிறப்பித்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *