டெல்லியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு புதிய திட்டங்கள் தீட்டப்பட்டு இருப்பதாக முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
கொரோனா தடுப்புக்கு புதிய திட்டங்கள்: கெஜ்ரிவால்
புதுடெல்லி :
டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஆன்லைனில் செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது:
கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த 5 முக்கிய திட்டங்களை செயல்படுத்த உள்ளோம். இந்த திட்டத்துக்கு 5 டி என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன்படி பரிசோதனை செய்தல், கண்டுபிடித்தல், சிகிச்சை அளித்தல், குழுவாக பணியாற்றுதல், தொடர்பில் இருந்தவர்களை கண்டறிதல் மற்றும் கண்காணித்தல் ஆகிய 5 பிரிவுகளாக பணிகள் நடைபெறும். வருகிற நாட்களில் இந்த பணிகள் முடுக்கிவிடப்பட உள்ளன.
டெல்லி அரசு, அதிவேக பரிசோதனை திட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்த உள்ளது. பரிசோதனையை அதிகரிக்காவிட்டால் யார் யாருக்கு பாதிப்பு உள்ளது என்பதை அறிய முடியாது. எனவே தென் கொரியாவை போல டெல்லியிலும் பரிசோதனையை முடுக்கிவிட உள்ளோம். பரிசோதனைக்கான ஒரு லட்சம் கருவிகள் வருகிற வெள்ளிக்கிழமை கிடைத்துவிடும். இதனைத்தொடர்ந்து பாதிப்பு அதிகம் உள்ள நிஜாமுதீன், தில்ஷாத் கார்டன் ஆகிய பகுதிகளில் பரிசோதனை தீவிரப்படுத்தப்படும்.
ஒரு லட்சம் பேருக்கு பரிசோதனை செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 30 ஆயிரம் பேருக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவ கட்டமைப்பும் மேம்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
டெல்லி சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்தர் ஜெயின் அளித்த மற்றொரு பேட்டியில், ‘‘டெல்லியில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிக்கப்படுமா? என்பது பற்றிய விவரத்தை தற்போது தெரிவிக்க இயலாது. வருகிற நாட்களில் அது தெரியவரும்’’ என்று கூறினார்.
Leave a Reply