சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் நேற்று ‘டிஸ்சார்ஜ்’ ஆகி, வீடு திரும்பினர்.

சென்னை,

சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர் 52 வயது பெண் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவரது 24 வயது மகன், லண்டனில் உள்ள பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார். கடந்த மாதம் அவர் லண்டனில் இருந்து சென்னை திரும்பினார்.

இந்தநிலையில், கடந்த மாத இறுதியில் மாணவரின் தாய் தொடர் இருமல், சளி மற்றும் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டார். இதையடுத்து கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அவருக்கு பரிசோதனை செய்தபோது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் கடந்த மாதம் 25-ந்தேதி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

அவரை தொடர்ந்து அவரது மகன் மற்றும் மாமியாருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. லண்டனில் இருந்து திரும்பிய மாணவர் மூலமாகவே மற்ற 2 பேருக்கும் கொரோனா தொற்று பரவியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அவர்களும் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியிலேயே சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். கொரோனா சிறப்பு வார்டில் 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், 3 பேரின் உடல் நிலைகளும் சீராக தொடங்கியது. இதையடுத்து அவர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை மீண்டும் செய்யப்பட்டது. இதில் கடைசி 2 பரிசோதனை முடிவுகளிலும் 3 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் நேற்று ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டனர்.

முன்னதாக அவர்களை ஆஸ்பத்திரி ‘டீன்’ டாக்டர் வசந்தாமணி, மருந்தியல் துறை தலைவர் டாக்டர் ராஜலட்சுமி ஆகியோர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது மூவரும் டாக்டர்களை கையெடுத்து கும்பிட்டு நன்றி தெரிவித்தனர். டாக்டர்கள் கைதட்டி சிரித்த முகத்துடன் அவர்களை வழியனுப்பி வைத்தனர்.

அதனைத்தொடர்ந்து 3 பேரும் ஆஸ்பத்திரியில் இருந்து கார் மூலம் வீட்டுக்கு சென்றனர்.

அவர்கள் வீட்டுக்கு சென்றாலும் சில நாட்கள் கண்காணிப்பில்தான் இருப்பார்கள் என்றும், சுகாதாரத்துறை ஊழியர்கள் அவர்கள் உடல்நலனை தொடர்ந்து கண்காணித்து வருவார்கள் என்றும் ஆஸ்பத்திரி டாக்டர்கள் கூறினார்கள்.

இதுகுறித்து ‘டீன்’ டாக்டர் வசந்தாமணி கூறுகையில், “லண்டனில் இருந்து திரும்பிய அந்த வாலிபர் மூலமாகவே இதர குடும்ப உறுப்பினர்களுக்கும் கொரோனா பரவியுள்ளது. தற்போது சிகிச்சை முடிந்து அவர்கள் வீடு திரும்பியுள்ளனர். கொரோனா என்பது உயிரை கொல்லும் வைரஸ்தான். ஆனால் சரியான விழிப்புணர்வும், மருத்துவ சிகிச்சையும் சேரும்போது அதில் இருந்து எளிதில் மீண்டுவிடலாம். இயல்பான வாழ்க்கையை வாழலாம். எனவே கொரோனா குறித்த விழிப்புணர்வுடன் சுகாதாரமாக மக்கள் இருக்கவேண்டும். நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அரசு ஆஸ்பத்திரியை நாடுங்கள்” என்றார்.

முன்னதாக சிகிச்சை பெற்று வந்த 3 பேரும் நேற்று ஆஸ்பத்திரியில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டபோது, டாக்டர்கள் கைதட்டி சிரித்த முகத்துடன் உற்சாகமாக அவர்களை வழியனுப்பி வைத்தனர்.

இதுவரை கொரோனா சிகிச்சை முடிந்த கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து 6 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டு உள்ளனர். கடந்த வாரம் இத்தாலிக்கு தேனிலவுக்கு சென்று கொரோனா தொற்றுடன் நாடு திரும்பிய 24 வயது இளம்பெண் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டார். கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் இன்னும் 17 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *