உத்தரபிரதேசத்தில், ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் மருத்துவ ஊழியர்களை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதால், அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

லக்னோ,

டெல்லி நிஜாமுதீன் பகுதியில் கடந்த மாதம் நடைபெற்ற தப்லிக் ஜமாத் மாநாட்டில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்களில் பலருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவி இருப்பது தெரியவந்து உள்ளது.

இந்த மாநாட்டில் பங்கேற்றவர் கள் உத்தரபிரதேசம், தெலுங் கானா, ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் உள்ள தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று இருப்பதால், அவர்கள் மூலம் மற்றவர்களுக்கும் கொரோனா பரவும் ஆபத்து ஏற்பட்டது. இதனால் அவ்வாறு சென்றவர்களை அந்தந்த மாநில போலீசார் கண்டுபிடித்து, தனிமைப்படுத்தி வைத்து மருத்துவ பரிசோதனை நடத்தி வருகிறார்கள். நோய்த்தொற்று உள்ளவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது.

உத்தரபிரதேசத்தில் இருந்து டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களை கண்டுபிடித்து, அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு அந்த மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் போலீசாருக்கு உத்தரவிட்டு இருக்கிறார்.

டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் 22 பேர் கண்டுபிடிக்கப்பட்டு கான்பூரில் உள்ள கணேஷ் சங்கர் நினைவு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் மருத்துவ ஊழியர்களை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாகவும், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் அந்த கல்லூரியின் முதல்வர் டாக்டர் ஆர்த்தி சாந்தினி தெரிவித்து உள்ளார்.

இதேபோல் அந்த மாநாட்டில் பங்கேற்ற சஹரன்பூரைச் சேர்ந்த 12 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதால் அவர்கள் பலராம்பூர் ஆஸ்பத்திரியில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

அவர்களும் மருத்துவ ஊழியர்களை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாகவும், அசைவ உணவு கேட்டு பிடிவாதம் செய்ததாகவும், தங்கள் அறைகளுக்குள் சென்று பூட்டிக் கொண்டதாகவும், ஒருவரையொருவர் கட்டிப்பிடித்துக் கொண்டதாகவும், ஒரே பாட்டிலில் தண்ணீர் அருந்தியதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

போலீசார் வந்து கடுமையான நடவடிக்கைகளை எடுத்த பிறகு நிலைமை கட்டுக்குள் வந்ததாகவும், மருத்துவ விதிமுறைகளை மீறி நடந்து கொண்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

ஆஸ்பத்திரியில் இருப்பவர்கள் அவ்வாறு நடந்து கொண்டது குறித்து முஸ்லிம் மத குருக்கள் இருவர் வருத்தம் தெரிவித்து உள்ளனர். தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு இருப்பவர்கள் சுகாதார விதிமுறைகளை பின்பற்றி கொரோனா வைரசை ஒழிக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

இதற்கிடையே, டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் சிலர் குஷிநகர் பகுதியில் வயல் வெளியில் பதுங்கி இருப்பதாகவும், அவர்கள் நேபாளத்துக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டு இருப்பதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து சென்று வயலில் பதுங்கி இருந்த 14 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டனர்.

About Author

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *