கொரோனா சமூக தொற்றாக பரவும் நிலைக்கான சங்கிலியை உடைத்து எறிந்துவிட்டோம் என்றும், ஊரடங்குக்கு மக்களின் ஒத்துழைப்பு 100 சதவீதம் கிடைக்கும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது குறித்து, அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
அமெரிக்கா, இத்தாலி போன்ற வளர்ந்த நாடுகள் உரிய நேரத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்காததால் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், பிரதமர் நரேந்திரமோடியும் சரியான நேரத்தில் ஊரடங்கு உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறார்கள். இதனால் சமூக தொற்று என்பது இல்லை. கொரோனா சமூக தொற்றுக்கான சங்கிலியை நாம் உடைத்து எறிந்துவிட்டோம்.
தி.மு.க. உள்ளிட்ட குற்றம் சாட்டுபவர்கள், கடந்த காலத்தில் மத்திய அரசில் அங்கம் வகித்தபோது பூனை காலுக்கு கீழே இரையை அமுக்கி வைத்ததுபோன்று இருந்தவர்கள். அவர்கள் எங்களை குறை சொல்வது சரியில்லை. அவர்கள் ஆட்சியில் இருந்தபோது நடந்த பேரிடர்களில், நிதியை வாரி, வாரி வழங்கினார்களா? ஆனால் நாங்கள் அனைத்து இடர்பாடுகளையும் திறமையாக சந்தித்து வெற்றி கொண்டிருக்கிறோம்.
நாங்கள் கேட்ட நிதியை முழுமையாக மத்திய அரசு கொடுக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நாங்கள் ரூ.12 ஆயிரம் கோடி கேட்டிருக்கி றோம். அதில் முதலாவதாக சுமார் ரூ.500 கோடி அளவுக்கு கொடுத்திருக்கிறார்கள். அழுத்தம் கொடுத்து, நாங்கள் கேட்ட மீதம் உள்ள தொகையை வாங்கி விடுவோம்.
மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்
அத்தியாவசிய பொருட்கள் தங்கு, தடையின்றி அனைவருக்கும் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மக்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கிறது. மக்களுடைய ஒத்துழைப்பு இல்லை என்றால் கொரோனா பரவல் 2-ம் கட்டத்தில் இருந்து 3-வது கட்டத்துக்கு சென்றிருக்கும். அந்த நிலையை அடையாமல் இருப்பதற்கு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவினை அனைவரும் பாராட்டுகிறார்கள். கொரோனாவை ஒழிப்பதற்கு அனைவரும் கைகோர்க்க வேண்டிய நேரம் இது.
மக்கள் ஒத்துழைப்பு இல்லை என்றால் எதையுமே நிறைவேற்ற முடியாது. இதுபோன்று மக்கள் ஒத்துழைப்பு தருவதால் இந்த நிலையிலேயே கொரேனாவுக்கு முடிவு கட்ட முடியும். ஊரடங்கு உத்தரவுக்கு மக்களின் ஒத்துழைப்பு 100 சதவீதம் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Leave a Reply