கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைக்கும் நிலையில், தென் கொரியாவில் கடும் பாதுகாப்பு நடைமுறைகளுடன் இன்று பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

கொரோனா அச்சத்திற்கு மத்தியில் தென் கொரியாவில் பாராளுமன்றத் தேர்தல்
சமூக விலகலை பின்பற்றி வாக்களிக்கும் மக்கள்
சியோல்:

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி மனிதகுலத்திற்கு பெரும் சவாலாக விளங்கி வருகிறது. 210 நாடுகளில் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1.26 லட்சம் மக்கள் இந்த வைரசுக்கு பலியாகி உள்ளனர். கொரோனா வைரஸ் காரணமாக முக்கிய தொழில்கள் முடங்கி பொருளாதார இழப்பை சந்தித்துள்ளன. பொது நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஆனால் கொரோனா அச்சத்திற்கு மத்தியிலும், தென் கொரியாவில் இன்று பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இன்று காலை முதலே அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடிகள் அனைத்திலும் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்ட பிறகே வாக்குப்பதிவு தொடங்கியது.

கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால், வாக்காளர்கள் சமூக விலகலை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும், முக கவசம், கையுறைகள் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு வருவதற்கு முனபே அவர்களது உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படுகிறது. வாக்காளர்களின் உடல் வெப்பநிலை 37.5 டிகிரி செல்சியசுக்கும் மேல் அதிகரித்து இருந்தால் அவர்கள் ஒரு தனி பூத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு அவர்களை வாக்களிக்க வைக்கிறார்கள்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்கவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. வீடுகளில் தனிமைப்படுத்திக்கொண்ட 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களுக்கும் வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், மற்ற வாக்காளர்களுக்கான வாக்குப்பதிவு நேரம் 6 மணிக்கு முடிவடைந்ததும், இவர்கள் ஒரு மணி நேரம் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

கொரோனா அச்சத்தால் மக்கள் வாக்களிப்பதற்கு வரமாட்டார்கள் எனக் கருதப்பட்ட நிலையில், மக்கள் அமைதியான வரிசையில் காத்திருந்து வாக்களித்துவருகிறார்கள்.

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் முதலில் அண்டை நாடான தென் கொரியாவுக்குதான் பரவியது. அப்போது சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக தென்கொரியா இருந்தது. எனினும் அந்த நாடு தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தியது. தற்போது அங்கு கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது. அதன்படி தென் கொரியாவில் கொரோனா தாக்குதலுக்கு ஆளான 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரில் 7,500க்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *