கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு வேலூரில் ஒருவர் உயிரிழந்தார். இதனால் தமிழகத்தில் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவுக்கு தமிழகத்தில் மேலும் ஒருவர் பலி
வேலூர்:
உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் இதுவரை 4789 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 124 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்திலும் கொரோனா தீவிரமடையத் தொடங்கியுள்ளது. வைரஸ் பரவுவதை தடுக்க மாநில அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இதற்கிடையில், வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்த 45 வயதுடைய ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா அறிகுறியுடன் சி.எம்.சி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. ஆய்வின் முடிவில் அந்த நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவந்தார்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அந்த நபர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், வைரஸ் பாதிப்பு காரணமாக உயிரிழந்த நபர் எந்த வித வெளியூர் பயணங்களும் மேற்கொள்ளவில்லை எனவும் உயிரிழந்த நபரின் குடும்பத்தினர் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் வேலூர் மாவட்ட சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply