முதல்-மந்திரிகளுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, கொரோனாவுக்கு எதிரான போர் இப்போதுதான் தொடங்கி இருப்பதாகவும், இந்த நோய்க் கிருமியை ஒழிக்க அனைவரும் ஒன்றுபட்டு போராடவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

புதுடெல்லி,

மனித குலத்தை அச்சுறுத்தி வரும் கண்ணுக்கு தெரியாத எதிரியான கொரோனாவை ஒழிக்க உலக நாடுகள் போராடிக்கொண்டு இருக்கின்றன. கொரோனா வைரஸ் தாக்கியதில் உலகம் முழுவதும் 47 ஆயிரத்துக்கும் அதிகமான பேர் பலியாகி உள்ளனர். 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நோய்க் கிருமியை எப்படி ஒழிப்பது என்று தெரியாமல் விஞ்ஞானிகள் திணறிக்கொண்டு இருக்கிறார்கள்.

கொரோனா தொற்று நோய் என்பதால் அது பரவாமல் தடுப்பதன் மூலமும், ஒவ்வொருவரும் தனித்து இருப்பதன் மூலமும்தான் பாதிப்பை குறைக்க முடியும். இதனால் கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் இந்தியா முழுவதும் கடந்த மாதம் 25-ந் தேதி நள்ளிரவு முதல் வருகிற 14-ந் தேதி வரை 21 நாள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

ஊரடங்கு அறிவிப்பை கடந்த 25-ந் தேதி வெளியிட்ட பிரதமர் மோடி, மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் தனித்து இருப்பதன் மூலமே கொரோனா பாதிப்பில் இருந்து தப்ப முடியும் என்று கூறினார். ஊரடங்கு நாட்களில் மருத்துவம், பால் சப்ளை போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால் பல ஊர்களில் மக்கள் அதை பொருட்படுத்தாமல் வெளியே நடமாடுவதால், கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அஞ்சப்படுகிறது. மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

இன்னொருபுறம் கொரோனா நோய்க்கிருமியால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற மருத்துவ பணியாளர்கள் போராடிக்கொண்டு இருக்கிறார்கள். ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் எப்படி அமல்படுத்தப்படுகிறது என்பது குறித்து பிரதமர் மோடி அவ்வப்போது மாநில முதல்-மந்திரிகளை தொலைபேசியிலும் காணொலி காட்சி மூலமும் தொடர்பு கொண்டு பேசி வருகிறார்.

அதேபோல் நேற்றும் அவர் டெல்லியில் இருந்தபடி, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் நிதிஷ் குமார் (பீகார்), சந்திரசேகர ராவ் (தெலுங்கானா), ஜெகன்மோகன் ரெட்டி (ஆந்திரா), ஜெய்ராம் தாகுர் (இமாசலபிரதேசம்), கெஜ்ரிவால் (டெல்லி) உள்ளிட்ட மாநில முதல்-மந்திரிகளுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்

இந்த உரையாடலின் போது உள்துறை மந்திரி அமித்ஷா, ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், சுகாதாரத் துறை மந்திரி ஹர்ஷவர்தன் ஆகியோரும் உடன் இருந்தனர். முதல்-மந்திரிகளுடன் பேசிய பிரதமர் மோடி, கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அவர் பேசுகையில் கூறியதாவது:-

கொரோனாவுக்கு எதிரான போர் இப்போதுதான் தொடங்கி இருக்கிறது. இதில் இருந்து நாம் ஒருபோதும் பின்வாங்கிவிடக்கூடாது; எந்த தவறும் நடந்துவிடக்கூடாது. கொரோனாவுக்கு எதிரான போர் சுகாதார பணியாளர் கள், போலீசார், அரசாங்கத்துக்கு மட்டுமானது என்று யாரும் கருதிவிடக்கூடாது. ஒவ்வொருவரும் இதை தனக்கு எதிரான போராக கருதவேண்டும்.

சமுதாயத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் மிகுந்த எச்சரிக்கையுடனும், ஒற்றுமையுடனும் இருந்து போராடி கொரோனாவை ஒழிக்கவேண்டும். கொரோனா ஒழிப்பு நடவடிக்கையில் நம்மிடம் உள்ள தொழில்நுட்ப வசதிகள் அனைத்தையும் பயன்படுத்த வேண்டும். அடுத்த சில வாரங்களில் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து, பரிசோதனை நடத்தி, அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதன் மூலம் உயிர் இழப்பு குறைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவர்கள் வசிக்கும் பகுதிகளை கண்டறிந்து, அந்த பகுதியை சுற்றிலும் பாதுகாப்பு வளையம் அமைத்து நோய் தொற்று பரவாமல் தடுக்க வேண்டும்

மருந்து பொருட்கள் மக்களுக்கு தடை இன்றி கிடைக்கச் செய்ய வேண்டும். மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பதற்கான கச்சா பொருட்கள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனியாக ஆஸ்பத்திரி வசதியை ஏற்படுத்த வேண்டும்.

மருத்துவர்களின் தேவை அதிகரித்து இருப்பதால் ‘ஆயுஷ்’ டாக்டர்கள், உரிய பயிற்சி அளித்து துணை மருத்துவ துறையைச் சேர்ந்தவர்களையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். என்.சி.சி. மற்றும் என்.எஸ்.எஸ். தொண்டர்களையும் பணிக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

மாவட்ட அளவில் நெருக்கடி கால மேலாண்மை குழுக்களை அமைத்து மாவட்ட கண்காணிப்பு அதிகாரிகளை நியமிக்க வேண்டும். கொரோனாவுக்கு எதிரான போர் எவ்வளவு நாட்கள் நீடிக்கும்? இதில் என்ன திருப்பம் ஏற்படும்? என்று நம்மால் கணிக்க முடியாது. பொதுவாக உலக அளவிலான நிலவரம் திருப்தி அளிப்பதாக இல்லை என்பதால், சில நாடுகளில் இரண்டாவது கட்ட பாதிப்பை கொரோனா ஏற்படுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே நாம் முன்கூட்டியே எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

நாம் அமல்படுத்தி இருக்கும் 21 நாள் ஊரடங்கு வீணாகி விடக்கூடாது. ஊரடங்கு காலம் முடிந்த பின்னரும் சமூக இடைவெளியை பின்பற்றுதல், முக கவசம் அணிதல், நம்மை சுத்தமாக வைத்துக் கொள்ளுதல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இப்படி பொறுப்புடன் நடந்து கொள்வதன் மூலம் நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

ஊரடங்கு காலம் முடிந்து பின்னர் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கான உத்திகள் குறித்த யோசனைகளை மாநிலங்கள் தெரிவிக்க வேண்டும். இந்த விஷயத்தில் மத்திய-மாநில அரசுகள் இணைந்து செயல்படவேண்டியது அவசியம் ஆகும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

காணொலி காட்சியின் போது பேசிய முதல்-மந்திரிகள் தங்கள் மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து தெரிவித்தனர். மேலும் கொரோனா பரவுவதை தடுக்க தக்க நேரத்தில் உறுதியான முடிவு எடுத்து ஊரடங்கை அமல்படுத்தியதற்காகவும், உரிய வழிகாட்டுதல்களை வழங்கி வருவதற்காகவும் பிரதமருக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்தனர்.

About Author

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *