தமிழகத்தில் கொரோனா நோய் சமூகப் பரவலான 3-வது நிலைக்கு போக வாய்ப்பு இருப்பதாக தெரிவித்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நோயின் தாக்கத்தை பொறுத்து ஊரடங்கை நீட்டிப்பது பற்றி முடிவு செய்யப்படும் என்றார்.

சென்னை,

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க ஏற்படுத்தப்பட்டு உள்ள மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையேயான 12 குழுக்களுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் தலைமைச் செயலாளர் க.சண்முகம், போலீஸ் டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி, சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உள்பட அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிந்ததும், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற காய்கறி, பழங்களை எல்லாம் ஆங்காங்கே இருக்கின்ற 111 குளிர்சாதன கிடங்குகளில் வைத்து பத்திரப்படுத்தி வைத்து பிறகு விற்பனை செய்து கொள்ளலாம். 30.4.2020 வரை அதற்கு வாடகை வசூல் செய்யப்பட மாட்டாது.

அத்தியாவசிய பொருட்கள் முழுமையாக தங்கு தடையில்லாமல் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக இன்றைக்கு எந்தெந்த மளிகைப் பொருட்கள் கிடைக்கவில்லையோ, அவையெல்லாம் கண்டறியப்பட்டு, அண்டை மாநிலங்களில் கூட்டுறவுத் துறையின் மூலமாக கொள்முதல் செய்யப்பட்டு தமிழகத்தில் விற்பனை செய்யப்படும்.

வெளி மாநிலங்களில் இருந்து மளிகைப் பொருட் களை வாகனங்கள் தங்கு தடையில்லாமல் தமிழகத்துக்கு கொண்டு வருவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க ஆணை பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

காவலர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம்

சென்னை, மயிலாப்பூர், போக்குவரத்து காவல்துறையில் காவலராக பணிபுரிந்து வந்த 33 வயதான அருண் காந்தி என்பவர் 8.4.2020 அன்று பட்டினப்பாக்கம் தெற்கு கால்வாய் சந்திப்பில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு ஊரடங்கை அமல் படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த போது நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன். அருண்காந்தியின் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து கொள்கின்றேன்.

அருண்காந்தியின் குடும்பத்துக்கு சிறப்பினமாக முதல்- அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.10 லட்சம் வழங்கப்படும். மேலும் அருண் காந்தியின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசுப் பணி வழங்கப்படும்.

கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் குறிப்பாக களப்பணியாற்றும் காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள், வருவாய் துறையை சேர்ந்த பணியாளர்கள், உள்ளாட்சி அமைப்பை சேர்ந்த பணியாளர்கள் போன்றவர்கள் எதிர்பாரதவிதமாக பணியில் இருக்கின்ற போது இறக்க நேரிட்டால் அவர்களின் குடும்பத்துக்கும் அரசு ரூ.10 லட்சம் வழங்கும். அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு கல்வி தகுதிக்கேற்றவாறு அரசின் சார்பாக வேலைவாய்ப்பு வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?

பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்படுமா?

பதில்:- நோயின் தாக்கத்தை பொறுத்துதான் முடிவு எடுக்கப்படும். நாளுக்கு நாள் இந்த தொற்று நோய் பரவலின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதையெல்லாம் ஆராய்ந்துதான் அரசு முடிவு செய்யும்.

3-வது நிலைக்கு போக வாய்ப்பு

கேள்வி:- இந்திய அளவில் எண்ணிக்கை அடிப்படையில் தமிழ்நாடு 2-வது இடத்தில் இருக்கிறது. தொற்று நோய் பரவலில் தமிழ்நாடு எந்த நிலையில் உள்ளது?

பதில் – இப்போது தமிழ்நாடு 2-வது நிலையில் இருக்கிறது. சமூகப் பரவலான 3-வது நிலைக்கு போவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆகவே 2-வது நிலையிலேயே கட்டுப்படுத்துவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது.

கேள்வி:- ‘ரெபிட் டெஸ்ட் கிட்’ வந்தவுடன் யாருக்கெல்லாம் பரிசோதனை செய்யப்படும்?

பதில்:- யார் யாருக்கெல்லாம் நோய் அறிகுறி இருக்கிறதோ, அக்குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு முதற்கட்டமாக பரிசோதனை செய்யப்படும். இரண்டாவது கட்டமாக, அவர்களை சுற்றி இருப்பவர்கள், யார் யாரெல்லாம் அவர்களுக்கு தொடர்பில் இருந்தார்கள் என்று கண்டறிந்து, அவர்களுக்கு இந்த பரிசோதனை செய்யப்படும். பிறகு அந்த சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்யப்படும்.

தலா ரூ.1,000 நிதியுதவி

கேள்வி:- முதற்கட்டமாக தமிழ்நாடு அரசு ரூ.3,280 கோடி ஒதுக்கி நிவாரணப் பணிகள் செய்து கொண்டு இருக்கிறது. இரண்டாம் கட்டமாக ஒரு நிவாரணத் தொகையை அறிவிக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்களே?

பதில்:- ஏற்கனவே என்னென்ன வாரியத்திற்கு உதவித் தொகை வழங்கப்படும் என்று அறிவித்தேன். இப்போது என்னென்ன வாரியம், அமைப்புகளுக்கு, அந்த வாரியத்தில் உள்ள ஏழை தொழிலாளர்களுக்கு அரசு உதவித் தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிடுகின்றேன்.

தூய்மைப் பணியாளர் நல வாரியம், கதர்கிராமத் தொழிலாளர் நல வாரியம், மீனவர் நல வாரியம், மூன்றாம் பாலினத்தவர் நல வாரியம், பழங்குடியினர் நல வாரியம், சிறு வியாபாரிகள் நல வாரியம், பூசாரிகள் நல வாரியம், உலமாக்கள் நல வாரியம், நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியம், சீர்மரபினர் நல வாரியம், நரிக்குறவர் நல வாரியம், திரைப்படத்துறை தொழிலாளர் நல வாரியம் என இந்த வாரியங்களில் 7 லட்சம் நபர்கள் இடம் பெற்று உள்ளனர். இந்த 7 லட்சம் பேருக்கும் தலா ரூ.1,000 வழங்கப்படும்.

அதேபோல, தமிழ்நாடு முழுவதும் 1,370 பட்டாசு தொழிற்சாலைகளில் இ.எஸ்.ஐ. திட்டத்தின் கீழ் பதிவு பெற்ற சுமார் 1,20,200 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்களுக்கும் தலா ரூ.1,000 உதவித் தொகை அரசால் வழங்கப்படும். இது இரண்டையும் சேர்த்தால் 8,20,200 தொழிலாளர்கள் இருக்கிறார்கள். இந்த தொழிலாளர்களுக்கு அ.தி.மு.க. அரசின் சார்பில் ரூ.82.02 கோடி உதவித் தொகை வழங்கப்படும்.

பிடித்தம் செய்யவில்லை

கேள்வி:- ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கும் பட்சத்தில் அதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்வதற்கு அரசு தயாராக இருக்கிறதா? ரூ.1,000 நிவாரண தொகை என்பது 21 நாட்களுக்காக கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும் நீட்டிப்பு செய்யும் பட்சத்தில் அரசு அதற்கு தயாராக இருக்கிறதா?

பதில்:- அரசாங்கத்திடம் எவ்வளவு நிதி இருக்கிறதோ அதைத்தான் கொடுக்க முடியும். மற்ற மாநிலங்களில் இப்படி கொடுக்கவில்லை. நம் மாநிலத்தில் எவ்வளவு கொடுத்திருக்கிறோம் என்பதை எண்ணிப் பாருங்கள். மற்ற மாநிலங்களில் எல்லாம் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தில் கூட பிடித்தம் செய்தார்கள். நாங்கள் அதைக்கூட பிடித்தம் செய்யவில்லை. அரசுக்கு எந்த அளவிற்கு நிதி இருக்கிறதோ, அந்த நிதியை பொறுத்து உதவி செய்யும்.

மத்திய அரசிடம் நிதி

கேள்வி:- குஜராத்தில் இருந்து மார்ச் 10-ந் தேதி தப்லிக் ஜமாத்தை சேர்ந்த 29 பேர் சென்னைக்கு வந்துள்ளார்கள். அவர்களில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களுடன் தங்கியிருந்த மேலும் 10 பேரை சேர்த்து, மொத்தம் 39 பேர்களை காவல்துறையினர் மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுமா?.

பதில்:- இந்திய நாட்டின் சட்ட திட்டத்துக்கு புறம்பாக யார் நடந்தாலும், சட்டத்தின் அடிப்படையிலே அரசு நடவடிக்கை எடுக்கும்.

கேள்வி:- மத்திய அரசு ரூ.510 கோடி நிதி வழங்கி இருக்கிறது. இன்னும் கூடுதல் நிதி கோரப்பட்டுள்ளதா?.

பதில்:- ஏற்கனவே இந்த கேள்வி எழுந்த காரணத்தினால், பிரதமருக்கும், மத்திய நிதி மந்திரிக்கும் கடிதம் எழுதி இருக்கிறோம்.

கேள்வி:- 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக மாணவர்களிடம் குழப்பம் எழுந்திருக்கிறதே?

பதில்:- என்ன குழப்பம் இருக்கிறது. இது பத்தாம் வகுப்பு. தேர்வு எழுதினால்தான் யார் சிறப்பாக படிக்கிறார்கள் என்பது தெரிய வரும். மற்றது போல் அல்ல. ஒன்பதாவது வகுப்பு என்றால் ஆல் பாஸ் என்று சொல்கிறோம். ஆனால் பத்தாம் வகுப்பு என்பது அடுத்த கட்டத்திற்கு நகர்வது. ஒரு முக்கியமான தேர்வு. அதை அரசு பரிசீலித்து கொண்டு இருக்கிறது.

கேள்வி:- ஒரு சில மாவட்டங்களில் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கான நேரத்தை குறைத்திருப்பது குறித்து…

பதில்:- மாவட்டம் முழுவதும் ஒரே ஆணைதான் பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரைக்கும் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். வேலூரில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணிக்குள் முடிந்து விடுகிறது. அங்கே இருக்கின்ற அதிகாரிகளும் சரி, அங்கே இருக்கின்ற பல்வேறு நிறுவனங்களை சேர்ந்தவர்களும் சரி, காலை 6 மணி முதல் மதியம் 12 மணிக்குள் நாங்கள் அத்தியாவசிய பொருட்களை எல்லாம் வாங்கிக் கொள்கிறோம் என்று தெரிவித்து உள்ளார்கள். அது ஒரு சிறு நகரம் தான். சென்னை போல் பெருநகரம் கிடையாது.

ரூ.100 கூட கொடுக்கலாம்

கேள்வி:- முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதி குறித்து?…

பதில்:- முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.101 கோடி வந்து இருக்கிறது. அந்த நிதி முழுவதுமே கொரோனா வைரஸ் தடுப்புப் பணிக்காக செலவழிக்கப்படும். மக்கள் தாராளமாக இந்த கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்கு நிதி வழங்க வேண்டும். ரூ.100 இருந்தால் கூட தங்களால் இயன்ற நிதியை அரசுக்கு வழங்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *